search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டும் வரை ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை - மு.க.ஸ்டாலின் சூளுரை
    X

    அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டும் வரை ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை - மு.க.ஸ்டாலின் சூளுரை

    அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டும் வரை ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் உள்ள அண்ணா திடலில் நேற்று மாலை தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா, அண்ணா பிறந்தநாள் விழா, தி.மு.க. தொடக்கநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். பொன்முடி எம்.எல்.ஏ. வரவேற்றார். கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ -மாணவிகளுக்கும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்கள் விழுப்புரம் இளையராஜா, ஆயந்தூர் செந்தில் உள்பட 10 பேருக்கும் பரிசுகளை வழங்கினார். மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது, தியாகதுருகம் பொன்.ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருது, குத்தாலம் கல்யாணத்திற்கு கலைஞர் விருது, புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருது, கவிக்கொண்டல் செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருது ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார். பேராசிரியர் விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.



    விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கும், ஏழைகளுக்கு மதிப்பளிக்கும் நாகரிகத்தை கருணாநிதி கடைசிவரை கடைபிடித்தார். அப்படிப்பட்ட பாரம்பரிய அரசியல் பின்னணியில் வார்த்தெடுக்கப்பட்டவன் தான் நான். என்றைக்கும் நான் கருணாநிதி ஆகமுடியாது. ஆனால் அவர் போல என்னால் உழைக்கமுடியும். அவர் வழியில் திராவிடர் இயக்க கோட்பாடுகளின்படி தி.மு.க. தலைவராக இருக்கும் என்னையும் கட்சியின் நிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டனும் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம், விவாதிக்கலாம். தி.மு.க. தலைவனான பின்பு நான் பங்கேற்கும் முதல் விழா. இது என் வாழ்நாளில் மறக்க முடியாத விழா.

    தமிழகத்தை சோதனையில் இருந்து காப்பாற்ற, அடிமைகளாக செயல்படும் இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட நாம் உறுதி ஏற்கவேண்டும். நாம் ஓய்வு எடுக்கக்கூடாது. உறங்கவும் கூடாது. நாம் ஓய்வு எடுத்துவிட்டால், இந்த தமிழகம் என்றைக்கும் விடியவே விடியாது. எனவே ஊக்கத்தை புதுப்பித்துக்கொண்டே இருந்தால் தான் ஒரு மதசார்பற்ற ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க முடியும்.

    மத்தியிலும், மாநிலத்திலும் ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சி. ‘பாசிச ஆட்சி ஒழிக’ என்ற மாணவியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளது. ‘ம்ம்’ என்றால் சிறைவாசம், ‘ஏன்’ என்றால் துப்பாக்கி சூடா? தமிழக மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். பாடம் புகட்டும் நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

    மத்திய பா.ஜ.க. அரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமே முதன்மையானது. காரணம் இங்கு ஆட்சியாளர்கள் சரியில்லை. ஆட்சியை காப்பாற்ற மட்டுமே ஒரு ஆட்சி நடத்துகிறார்கள். நாளொரு ஊழல், பொழுதொரு ஊழல் என்பதே தமிழக ஆட்சியாளர்கள் குரல்.

    ஆட்சியாளர்கள் வீடுகளில் சோதனை, அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை. இதைவிட வெட்கக்கேடு இருக்கிறதா? விரைவில் தி.மு.க. ஆட்சி உருவாகக்கூடிய ஒரு சூழலில், கரன்சி நோட்டுகள் எண்ணுபவர்கள் கம்பி எண்ணும் சூழ்நிலை வரும், தொடர்ந்து பா.ஜ.க. அரசுக்கு பல்லக்கு தூக்கிவரும் அ.தி.மு.க. அரசு தான், இன்றைக்கு தமிழகத்தின் அவமான ஆட்சியாக, நாட்டுக்கே ஆபத்தான ஆட்சியாக இருந்துகொண்டு இருக்கிறது.

    சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தில், எங்கள் 48 மாத நிர்வாகத்தை பற்றி விவாதிக்க தயாரா? என்று பேசினாரே... வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவீர்கள் என்றீர்களே, செய்தீர்களா? 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றீர்களே, முடிந்ததா? பண மதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் ஒழிந்ததா? வறுமையை ஒழிப்பேன் என்றீர்களே, செய்தீர்களா? சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளே வீதிக்கு வந்து பேட்டியளித்தார்களே.... யாருடைய ஆட்சியாலாவது இது நடந்திருக்கிறதா?

    ராஜ்பவன் என்பது கவர்னர் மாளிகையா அல்லது மாநில அரசுகளை கண்காணிக்கக்கூடிய கேமராக்களா? இந்த 4 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு ஏதாவது ஒரு உருப்படியான காரியம் செய்தீர்களா? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியுமா?

    மாநிலத்தில் ஆளும் கொள்ளை கூட்டத்தையும், மத்தியில் உள்ள சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சியையும் ஜனநாயக களத்தில் வீழ்த்துவது ஒன்றே நமக்கு இலக்கு. இது வெறும் மாநாடு மட்டுமல்ல, தேர்தல் களத்துக்கு தயாராகும் பாசறை. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலா? உள்ளாட்சி தேர்தலா? சட்டபை தேர்தலா? பாராளுமன்ற தேர்தலா? எந்த தேர்தலாக இருந்தாலும் நாட்டின் நிலையை கருதி, களம் எதுவாக இருந்தாலும் வெற்றி தி.மு.க.வுக்கு தான்.

    70 வருடம் பட்டொளி வீசி பறக்கும் நம் இருவண்ண கொடியை, இன்னும் 100 ஆண்டுகளுக்கு செலுத்தி தமிழகத்தை வளம் வாய்ந்த மாநிலமாக மாற்றவேண்டும். இந்த முப்பெரும் விழாவில் சூளுரைப்போம். பாசிச ஆட்சி முடியட்டும், மக்களாட்சி விடியட்டும். ஊழல் ஆட்சி முடியட்டும், தி.மு.க. ஆட்சி மலரட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    ஒரு எதிர்கட்சியாக இருந்து என்ன சாதித்தீர்கள் என்கிறார்கள். நாங்கள் இந்த ஆட்சியின் குறைகள், ஊழலை தான் எடுத்து காட்ட முடியும். சட்டமன்றத்தில் சரம்சாரமாக குட்காவை எடுத்து மு.க.ஸ்டாலின் காட்டினார். இன்றைக்கு அது அழுத்தப்பட்டு, வெடித்து பலபேர் கம்பி எண்ணக் கூடிய அளவுக்கு உள்ளது. அமைச்சர்கள் உள்ளே போக போகிறார்கள். இது ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியின் செயல். தளபதியின் கட்டளைக்கு காத்திருப்போம் நிறைவேற்றுவோம், பகை முடிப்போம், வெல்வோம். அவரை அரியணையில் அமர்த்துவோம் இதுதான் சபதம். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக முதற்கட்டமாக ரூ.30 லட்சத்தை மு.க.ஸ்டாலினிடம் மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் திருச்சி சிவா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, பிச்சாண்டி, சுரேஷ்ராஜன், மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழரசு, மாவட்ட செயலாளர்கள் (கடலூர் கிழக்கு) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,(கடலூர் மேற்கு) கணேசன், திருவண்ணாமலை எ.வ.வேலு, முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, நேரு, பூங்கோதை எம்.எல்.ஏ., கீதாஜீவன் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின், முன்னாள் எம்.பி. சுகவனம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×