search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்காசியில் தீ வைக்கப்பட்ட கடையில் பொருட்கள் எரிந்து கிடக்கும் காட்சி
    X
    தென்காசியில் தீ வைக்கப்பட்ட கடையில் பொருட்கள் எரிந்து கிடக்கும் காட்சி

    தென்காசியில் பா.ஜ.க. நிர்வாகியின் கடை உள்பட 2 கடைகளுக்கு தீவைப்பு

    தென்காசியில் பா.ஜ.க. நிர்வாகியின் கடை உள்பட 2 கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தென்காசி:

    செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தென்காசி பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்கனவே தென்காசி தாலுகா பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    தென்காசி நகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றிவந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    இந்தநிலையில் நேற்றிரவு தென்காசியில் 2 கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசியை சேர்ந்தவர் ஜீவன்ராம். இவர் மேல ஆவணி மூலவீதியில் பேன்சி கடை வைத்துள்ளார். இரவு இந்த கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதனால் கடையில் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதே போல் வாய்க்கால் பாலத்தில் ராஜாசிங் என்பவரது மளிகை கடைக்கும் தீ வைக்கப்பட்டது. ராஜா சிங் பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து தென்காசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ வைத்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×