search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயல்குடி அருகே பழுதடைந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்
    X

    சாயல்குடி அருகே பழுதடைந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

    சாயல்குடி அருகே இதம்பாடல் கிராமத்தில் பழுதடைந்த மின்கம் பத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சாயல்குடி:

    இதம்பாடல் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள கிருஷ்ணன் கோவில் நுழைவாயில் அருகே மின் கம்பம் மிகவும் பழுதடைந்து கான்கிரீட்டுகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து பலவீனமடைந்துள்ளதால் இந்த மின்கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்தான நிலை உருவாகி உள்ளது.

    இதேபோல் இதம்பாடல் கிழக்குத்தெரு மற்றும் கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பழுதடைந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

    கிருஷ்ணாநகர் பகுதி அருகேயுள்ள வயல் வெளிகளில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகத் தொங்கி கையால் தொடும் உயரத்தில் உள்ளது.

    எதிர்வரும் மழைக் காலங்களில் விவசாயப்பணி மேற்கொள்ளும்போது இந்த தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பிகளால் உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி, வேல்சாமி மற்றும் கிராமப் பொதுமக்கள் கூறுகையில் உத்தரகோசமங்கை உப மின் நிலையத்திலிருந்து எங்கள் கிராமத்திற்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்தப்பகுதியிலுள்ள மின்கம்பங்கள் 55 வருடங்களுக்கு முன்னர் நடப்பட்டு மின் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது மின்சாரம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும் ஏற்கனவே உள்ள திறன் குறைந்த டிரான்ஸ்பார்மர் மூலமே இக்கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதால் இரவு வேலைகளில் டியூப் லைட் கூட பயன்படுத்த முடியவில்லை.

    இதனால் இக்கிராம மாணவர்கள் இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் படிக்க இயலாமல் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

    இதுகுறித்து பலமுறை மின்வாரியத்தினரிடம் புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தும் இதுநாள்வரை எவ்வித பயனும் இல்லை என்றனர்.

    எனவே இதம்பாடல் கிராமத்திற்கு கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை நட வேண்டும்.

    பழுதடைந்துள்ள மின்கம்பிகளை மாற்றுவதுடன் தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பிகளை உயரமாக இழுத்து கட்டி விபத்து அபாயத்தை தவிர்க்கச் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×