search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழவேற்காட்டில் மீன்பிடி தொழில் பாதிப்பு - போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவிப்பு
    X

    பழவேற்காட்டில் மீன்பிடி தொழில் பாதிப்பு - போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவிப்பு

    பழவேற்காட்டில் முகத்துவாரம் தூர்வாராததால் வரும் 17-ந் தேதி போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நாட்டு படகுகள் மூலம் மீன் பிடிக்கிறார்கள்.

    இவர்கள் பழவேற்காடு ஏரியிலிருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். தற்போது முகத்துவாரத்தை மணல்மேடு அடைத்து விட்டது.

    எனவே, படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன் பிடிக்க செல்லவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

    பழவேற்காடு பகுதியில் உள்ள முகத்துவாரத்தை தூர்வாரி, தூண்டில் வளைவு அமைத்து தர அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை.

    முகத்து வாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைத்து தரும் வரை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் ஆரம்பாக்கம் மீனவர்கள் முதல் பழவேற்காடு பகுதி என 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முகத்துவாரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்த இருக்கிறோம். வருகிற 17-ந் தேதி இந்த போராட்டம் நடக்கும். அனைத்து மீனவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம்.

    முகத்துவாரத்தில் போராட அனுமதி மறுக்கப்பட்டாலும்,, குடும்பங்களாக படகில் சென்று, முகத்துவாரத்தில் திட்டமிட்டபடி வரும் 17-ந் தேதி போராட்டம் நடக்கும். இந்த போராட்டத்தின் போது மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க போகமாட்டோம். தூர்வாரி கொடுக்கும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு மீனவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×