search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூக்கள் பூக்க தொடங்கின - சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
    X

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூக்கள் பூக்க தொடங்கின - சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி பூக்கள் பூக்க தொடங்கின. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. நவம்பர் மாத இறுதி நாட்களில் பனிக்காலம் தொடங்கும். கடந்த கோடை சீசனையொட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டிக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். கோடை சீசன் முடிந்ததும், நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

    சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் சில பகுதிகளில் புற்கள் சேதமடைந்தன. அங்கு புதியதாக புற்கள் கொத்து, கொத்தாக போடப்பட்டு சமன்படுத்தப்பட்டது. வளர்ந்து இருந்த புற்களை எந்திரம் மூலம் வெட்டி புல்வெளிகள் அழகுப்படுத்தப்பட்டது. பராமரிப்பு பணியின் போது, சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், சுற்றிலும் கயிறு கட்டப்பட்டு இருந்தது. 2-வது சீசனை முன்னிட்டு பூங்காவை தயார் செய்யும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    2-வது சீசனையொட்டி கடந்த ஜூலை மாதம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. டெல்பீனியம், டேலியா, சால்வியா, பிகோனியா, போலியேஜ், ஜீன்னியா, சைக்ளோமன், அலீசம், கேலண்டூலா, பெனிஸ்டமன், இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, ஆஸ்டர், ஸ்வீட் வில்லியம், வெர்பினா, பால்சம் உள்பட 85 ரகங்களை சேர்ந்த 2½ லட்சம் மலர் செடிகள் பூங்காவில் நடப்பட்டன.

    ஜப்பான் பூங்கா, நியூ கார்டன், இலைப்பூங்கா, இத்தாலியன் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பாத்திகளில் நடவு செய்யப்பட்டன. மேலும் நடைபாதை ஓரங்களில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடப்பட்டு உள்ளன. இந்த மலர் செடிகள் நன்றாக வளர உரமிடப்பட்டது.

    ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததாலும், காலநிலை அடிக்கடி மாறியதாலும் மலர் செடிகளில் பூக்கள் பூப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தாவரவியல் பூங்காவின் இத்தாலியன் பூங்காவில் மேரிகோல்டு, சால்வியா மலர் செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கி விட்டது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் அவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். பூங்காவில் பூக்கள் பூக்க தொடங்கியதால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்க உள்ளது.

    இதுதவிர 7 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளும் பூக்க ஆரம்பித்து விட்டன. அவை பெரணி இல்லம் அருகே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூந்தொட்டிகளில் பூக்கள் நன்றாக பூத்து குலுங்க தொடங்கியதும், சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக மாடத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட உள்ளது. இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கும் மலர்கள் அவர்களை கவர உள்ளது.
    Next Story
    ×