search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே இருதரப்பினரிடையே மோதல் - 4 பேர் கைது
    X

    பண்ருட்டி அருகே இருதரப்பினரிடையே மோதல் - 4 பேர் கைது

    பண்ருட்டி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர். இந்தமோதல் தொடர்பாக வி.ஆண்டிக்குப்பத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 19). இவரது நண்பர் அஜித்குமார்(18). இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் பண்ருட்டி சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    வரும் வழியில் ஒட்டுக்காட்டுஅம்மன் கோவில் அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த விஜயன் (42), அருண்குமார்(21) ஆகியோர் ஏன்? மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறீர்கள் என்று அவர்களை தட்டிக்கேட்டனர்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயன், அருண்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்த அரவிந்த், அஜித்குமார் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்று தங்களது ஆதரவாளர்களிடம் கூறினர். இதைத் தொடர்ந்து அரவிந்துக்கு ஆதரவாக கருணாகரன்(25), சங்கர்(45) ஆகியோர் வந்தனர். பின்பு அரவிந்த் ஆதரவாளர்களுக்கும், விஜயன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இருதரப்பினரும் அடி-தடியில் ஈடுபட்டனர். சரமாரியாக கற்களை வீசிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அரவிந்த், அஜித்குமார், விஜயன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக பண்ருட்டி போலீசில் அரவிந்த் தரப்பிலும், விஜயன் தரப்பிலும் புகார் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், தாசில்தார் ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த விஜயன், அருண்குமார், கருணாகரன், சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தமோதல் தொடர்பாக வி.ஆண்டிக்குப்பத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


    Next Story
    ×