search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் சிறையில் உள்ள தீவிரவாதி 50 தடவை வெளிநாட்டுக்கு பேசினான் - சோதனையில் கண்டுபிடிப்பு
    X

    புழல் சிறையில் உள்ள தீவிரவாதி 50 தடவை வெளிநாட்டுக்கு பேசினான் - சோதனையில் கண்டுபிடிப்பு

    கஞ்சா கடத்தல் மற்றும் கள்ள நோட்டுகள் பரிமாற்றம் செய்வது குறித்து புழல் சிறையில் உள்ள தீவிரவாதி 50 தடவை வெளிநாட்டுக்கு பேசி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #PuzhalPrison
    சென்னை:

    நாடு முழுவதும் மத்திய சிறைகளில் ஏராளமான தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் ஜெயிலுக்குள் இருந்தாலும் தங்களது பணப்பலத்தை பயன்படுத்தி தேவையான வசதிகளை பெற்றுக் கொள்வது உண்டு. அதுமட்டுமின்றி நவீன தொலைத்தொடர்பு சாதனங்களையும் வாங்கி பயன்படுத்துவது உண்டு.

    ஜெயிலுக்குள் இருந்தபடி அந்த தீவிரவாதிகள் வெளி நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டு பேசுவதும் நடந்து வருகிறது. இதன் மூலம் நாசவேலைக்கு திட்டமிடும் பயங்கரமும் நடப்பது உண்டு.

    இதனால் சிறைகளில் உள்ள தீவிரவாதிகளின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் உளவுத்துறையினர் கண்காணிப்பதையும் வழக்கத்தில் வைத்துள்ளனர். மத்திய உளவுத்துறையின் இந்த கண்காணிப்பின்போதுதான் தமிழ்நாட்டில் இருந்து வங்கதேசம், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு நிறைய செல்போன் அழைப்புகள் சென்றதை கண்டு பிடித்தனர்.

    உளவுத்துறையின் தீவிர ஆய்வின்போது சென்னையில் புழல் ஜெயிலில் இருந்து வங்கதேசத்துக்கும், மலேசியாவுக்கும் ஒரே எண்ணில் இருந்து நிறைய தடவை பேசப்பட்டது தெரிய வந்தது. கஞ்சா கடத்தல் மற்றும் கள்ள நோட்டுகள் பரிமாற்றம் செய்வது குறித்து தீவிரவாதிகள் தகவல்களை பரிமாறி கொண்டதை உளவுத்துறையினர் மோப்ப பிடித்தனர்.

    இதுபற்றி தமிழக சிறைத் துறை அதிகாரிகளுக்கு மத்திய உளவுத்துறை தகவல் கொடுத்து உஷார்ப்படுத்தியது. அதன் பேரில்தான் கடந்த ஒரு மாதமாக போலீசார் சோதனை நடத்தி 20-க்கும் மேற்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்து இருந்தனர்.

    இலங்கையைச் சேர்ந்த நிகாஷ் அவனது கூட்டாளி மதன் ஆகிய இருவரும் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். அவர்கள் இருவரும் நவீன போன் மூலம் வங்கதேசத்தில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பலிடம் பேசி உள்ளனர்.

    சிறையில் இருந்தபடியே அவர்கள் கஞ்சா கடத்தல்களை பல நூறு கோடி ரூபாய்க்கு செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசார் அவர்கள் செல்போன்களை துருவி துருவி ஆய்வு செய்தனர்.

    அப்போதுதான் முதல் வகுப்பு சிறைகளில் இருக்கும் கைதிகள் அனைத்து வகை வசதிகளையும் பெற்று மிக மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில்தான் நேற்று போலீசார் சோதனை நடத்தி தொலைக்காட்சி பெட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    புழல் ஜெயிலுக்குள் இருக்கும் உயர்மட்ட அறைகளில் தீவிரவாதி ஒருவனும் இருக்கிறான். அவன் ரகசிய செல்போன் மூலம் வங்கதேசம், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு பேசி உள்ளான். குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் அவன் 50 தடவை பேசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் அச்சடிக்கப்படும் இந்திய ரூபாய் போன்ற கள்ள நோட்டுகளை கடத்தி வருவது பற்றி அவன் பேசியதாக தெரிகிறது. அவன் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவனுக்கு உதவி சிறைத்துறை ஊழியர்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    முதல் வகுப்பில் இன்னொரு தீவிரவாதியும் இருக்கிறான். அவன் மனம் திருந்தி விட்டதாக தெரிகிறது. அவன் மூலம் போலீசாருக்கு ஏராளமான புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.

    இதனால் மற்ற கைதிகள் அவன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவனை கொலை செய்யவும் மற்ற கைதிகள் சதிதிட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கைதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புழல் சிறையில் முதலில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சாதரணமாக கருதப்பட்டது. ஆனால் புழல் ஜெயிலுக்குள் இருந்தபடி முதல் வகுப்பு கைதிகள் தேச துரோக செயல்களில் ஈடுபடுவது உறுதியாகி உள்ளது. எனவே முதல் கைதிகளிடம் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. #PuzhalPrison
    Next Story
    ×