search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் நாளை தி.மு.க.முப்பெரும் விழா - விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
    X

    விழுப்புரத்தில் நாளை தி.மு.க.முப்பெரும் விழா - விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

    விழுப்புரத்தில் நாளை நடைபெறவுள்ள தி.மு.க.முப்பெரும் விழாவில் திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி பேசுகிறார். #MKStalin #DMK

    விழுப்புரம்:

    தந்தை பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க.உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக தி.மு.க.சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா நாளை(15-ந் தேதி) விழுப்புரத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் உள்ள அண்ணா திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னையில் இருந்து கார் மூலம் நாளை 11 மணியளவில் விழுப்புரம் வருகிறார். மாவட்ட எல்லையான விக்கிரவாண்டியில் சூர்யா என்ஜினீயரிங் கல்லூரி அருகில் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதன்பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்துக்கு செல்கிறார். அங்கு ஓய்வு எடுக்கெடுக்கிறார்.

     


    மாலை 4 மணிக்கு விழா தொடங்குகிறது. தொடக்க நிகழ்ச்சியாக பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. கருணாநிதியின் புகழ்பெற்ற பாடல்கள் பாடப்படுகின்றன.

    முப்பெரும் விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ.வரவேற்று பேசுகிறார். பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழும், சிறந்த ஆட்டோ டிரைவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்குகிறார்.

    மேலும் மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது, பொன்.ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருது, குத்தாலம் கல்யாணத்துக்கு கலைஞர் விருது, புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருது, கவிக்கொண்டல் செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருது ஆகிய விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அவர் கலந்துகொள்ளும் முதல் கட்சி நிகழ்ச்சி என்பதால் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    விழா நடைபெறும் மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் விழா நடைபெறும் மைதானம் மற்றும் விழுப்புரம் நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அலங்கார வளைவுகள், கொடி தோரணங்கள், கட்-அவுட்டுகள் மற்றும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. #MKStalin #DMK

    Next Story
    ×