search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக அரசுக்கு எதிராக மீண்டும் தோப்பு வெங்கடாச்சலம் போர்க்கொடி
    X

    அதிமுக அரசுக்கு எதிராக மீண்டும் தோப்பு வெங்கடாச்சலம் போர்க்கொடி

    சென்னையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மீண்டும் அரசுக்கு எதிராக 8 எம்.எல்.ஏ.க்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் கட்சியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. #ADMK #ThoppuVenkatachalam #EdappadiPalaniswami
    ஈரோடு:

    தமிழக முன்னாள் அமைச்சராக இருந்தவர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம். பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள இவர் சுற்றுப்புற சூழல்துறை அமைச்சராக இருந்தார்.

    இப்போது ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள கே.சி. கருப்பணன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ளார்.

    முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலத்தில் கட்சி பிளவுபடாமல் இருப்பதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கோபி எம்.எல்.ஏ. கே.ஏ. செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்) கொடுக்கப்பட்டது.

    செங்கோட்டையனுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்ததில் இருந்து கொங்கு மண்டலத்தில் மற்றொரு முக்கிய நபராக விளங்கும் தோப்பு வெங்கடாச்சலத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதனால் அரசுக்கு நெருக்கடி கொடுக்க தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தினகரன் அணி பக்கம் தாவினார். இவரும் முன்னாள் அமைச்சர் கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜியும் இணைந்து அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டபோதுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வை அழைத்து உங்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அல்லது கட்சியில் பெரிய பதவி தருகிறோம் என்று கூறி சமாதானப்படுத்தினர்.

    இந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்ட தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மீண்டும் எடப்பாடி அணி பக்கம் தாவினார். அவருக்கு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    இருந்த போதிலும் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 தடவை நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டபோது தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

    அதே சமயம் ஈரோடு மாவட்ட எல்லையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும்போதெல்லாம் அவரை வரவேற்க தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தவறவில்லை.

    ஈரோடு மாவட்ட அமைச்சர்கள் (செங்கோட்டையன், கருப்பணன்) உள்ளூர் எம்.எல்.ஏ.க்களை மதிப்பதில்லை. அவர்கள் பரிந்துரையை ஏற்பது இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.


    சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களை அழைத்து கூட்டம் நடத்தும் போதெல்லாம் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வும் தவறாமல் கலந்து கொள்வார்.

    ஆனால் தனக்கென்று ஒரு வட்டாரத்தை வைத்துக் கொண்டு சில எம்.எல்ஏ.க்களுடன் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. ரகசிய கூட்டமும் நடத்தி வந்தார்.

    இப்படி அடிக்கடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வுக்கு நேற்று கட்சியில் புதிய பதவியும் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    எனினும் அவர் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை என்றே கூறப்படுகிறது. சென்னையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மீண்டும் அரசுக்கு எதிராக 8 எம்.எல்.ஏ.க்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இவர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விவகாரம் கட்சியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் உள்ள நிலையில் இப்போது தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தலைமையில் 8 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

    இது குறித்தும் 8 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நீங்கள் தனியாக நடத்தி உள்ளீர்களே? என்றும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சிரித்தார். எம்.எல்.ஏ.க்களுடன் கூட்டம் நடத்தியதை அவர் மறுக்காமல் மழுப்பினார்.

    அவர் கூறும்போது, ‘‘அமைச்சர் பதவி வேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு அது முக்கியமும் அல்ல. அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவி என பல முக்கிய பதவிகளை ஏற்கனவே மறைந்த அம்மா எனக்கு கொடுத்து விட்டார்.

    எம்.எல்.ஏ.க்களை மாவட்ட அமைச்சர்கள் மதிக்க வேண்டும். அவர்களின் பரிந்துரையை ஏற்க வேண்டும். அனைத்து தொகுதிகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்பது தான் என் கருத்து’’ என்று கூறி முடித்துக்கொண்டார்.  #ADMK #ThoppuVenkatachalam #EdappadiPalaniswami
    Next Story
    ×