search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் அருகே 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
    X

    நாமக்கல் அருகே 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்

    நாமக்கல் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 98 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொலைதூர கிராம மக்களும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகின்றது. நாமக்கல் மாவட்டம் விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டம் ஆகும். வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், வேளாண் இடுபொருட்கள், விதைகள், மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து, குறைந்த நீரை கொண்டு நிறைந்த மகசூலை பெறுவதோடு நீர் சேமிப்பிற்கும் உதவிட வேண்டும்.

    பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களுக்கு தேவையான வருமான சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்று, விதவை சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட 17 வகையான சான்றிதழ்களையும் வருவாய் துறையின் சார்பில் இருக்கும் இடத்தில் இருந்தே பெறும் வகையில் இ-சேவை மையங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் 37 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 57 ஆயிரத்து 494 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    அதை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அவற்றை உரிய அலுவலரிடம் வழங்கி, அந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இந்த முகாமில் வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்ணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்ரமணியம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×