search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரசாயன கலவை கலந்திருப்பதாக விநாயகர் சிலைகளை விற்க அதிகாரிகள் திடீர் தடை
    X

    ரசாயன கலவை கலந்திருப்பதாக விநாயகர் சிலைகளை விற்க அதிகாரிகள் திடீர் தடை

    திருவள்ளூர் அருகே ரசாயன கலவை கலந்திருப்பதாக கூறி விநாயகர் சிலைகளை விற்க அதிகாரிகள் தடை விதித்து சீல் வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் சாலையோரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த ஏராளமானோர் தங்கி விநாயகர் சிலைகளை கடந்த 3 மாதங்களாக இரவும் பகலும் தயாரித்தனர்.

    தற்போது வர்ணங்கள் பூசிய நிலையில் பெரிய அளவிலான 50-க்கும் மேற்பட்ட சிலைகளை விற்பனைக்குத் தயாராக வைத்து இருந்தனர்.

    இந்த நிலையில், இன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்காக முன் பணம் கட்டியவர்கள் ஏராளமானோர் பல்வேறு வாகனங்களில் அங்கு குவிந்தனர்.

    இதற்கிடையே விற்பனைக்கு தயாரான சிலைகளை திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சிலைகளில் ‘‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’’ என்ற ரசாயன பவுடர் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிந்தது. சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி அதிகாரிகள் விநாயகர் சிலை விற்பனைக்கு தடை செய்து சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பல்வேறு கிராமங்களில் இருந்து சிலைகளை எடுத்துச் செல்வதற்கு வாகனங்களில் வந்திருந்த பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருவள்ளூர்-திருப்பதி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாமரைப்பக்கம் பகுதியில் ரசாயனக் கலவை இல்லாமல், எளிதில் நீர் நிலையில் கரையக்கூடிய மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்காத வண்ணம் சிலைகள் உள்ளது என்றும் அங்கு விநாயகர் சிலைகள் வாங்கும் படியும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து சிலைகள் வாங்க வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×