search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னாளப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் அவதி
    X

    சின்னாளப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் அவதி

    சின்னாளபட்டி அரசு மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் நியமனம் செய்த பின்னரும் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியில் வட்டார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 32 படுக்கைகள் கொண்டு நவீன மருத்துவமனையாக மாற்றப்பட்டு ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட்ட இந்த மருத்துவ மனைக்கு ஒரு வட்டார மருத்துவ அதிகாரி, 3 மருத்துவர்கள், 1 சித்த மருத்துவர், 5-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 2 மருந்தாளுநர்கள் என போதிய அளவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

    24 மணி நேர மருத்துவ மனையாக செயல்படும் இந்த மருத்துவ மனையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் ஆய்வு மேற்கொண்ட போது, மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து சிப்ட் முறையில் ஒரு மருத்துவர் 8 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும் என்றும், இவ்வாறு சிப்ட் முறையில் 3 மருத்துவர்கள் 8 மணி நேரம் சுழற்சி முறையில் 3 சிப்டுகளாக 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி சென்றார்.

    இதன் பயனாக 4 மாத காலம் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருந்தனர். இதனால் சின்னாளபட்டி பொது மக்கள் பிரசவம் உள்பட அனைத்து விதமாக சிகிச்சைக்கு எந்த நேரமும் இந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் கடந்த 6 மாதங்களாக மருத்துவர்கள் தாங்களாக சிப்ட் முறையை மாற்றி பழைய முறைப்படியே 3 மருத்துவர்கள் மற்றும் ஒரு வட்டார மருத்துவர் என 4 பேரும் காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பணியில் இருப்பதாகவும், பின்னர் வெளியில் சென்று விடுவதாகவும், பின்னர் ஒரு மருத்துவர் மட்டும் மாலை 4 மணிக்கு வந்து ஒரு மணி நேரம் பணியில் இருந்து விட்டு சென்று விடுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே இங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×