search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
    X

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பரவலாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கிராமப்பகுதில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் தொழில்கள் முடங்கும் நிலை உண்டாகி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் பகல்வேளையிலும், இரவிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் கீழப்பாவூர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலைகளில் மின்வெட்டு காரணமாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சங்கரன்கோவில், புளியங்குடி பகுதியில் ஏராளமான விசைத்தறிகள் உள்ளன. இந்த விசைத்தறி கூடங்களிலும் மின்வெட்டு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    பகலில் கடும் வெப்பம் நிலவும் வேளையில் மின் தடை காரணமாக மேலும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவிலும் இதே நிலை தொடர்கிறது. சராசரியாக கிராமப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலும், நகர்ப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு அதிகமாகவும் மின்வெட்டு ஏற்படுகிறது.

    இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்," நெல்லை மாவட்டத்தில் பணகுடி, ஆலங்குளம், ஊத்துமலை பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தேன்மேற்கு பருவக்காற்றினால் இந்த காற்றாலைகளில் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காற்று குறைந்ததால் மின் உற்பத்தி குறைந்துவிட்டது. அதே வேளையில் மின் நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது" என்றார்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பகுதியில் கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தூத்துக்குடி தொழிற்சாலைகள் நிறைந்துள்ள பகுதி என்பதால் மின்வெட்டு கடும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் கல்வியும் பாதித்துள்ளது. #tamilnews
    Next Story
    ×