search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தப்பட்ட திருவாரூர் ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு - 2 பேர் கைது
    X

    கடத்தப்பட்ட திருவாரூர் ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு - 2 பேர் கைது

    திருவாரூர் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    திருவாரூர்:

    திருவாரூரை சேர்ந்தவர் நீதிமோகன் (வயது 52). ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர். இவர் கடந்த 9-ந்தேதி மோட்டார் சைக்கிளில் தனது உதவியாளர் ராஜேந்திரன் என்பவருடன் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். பிடாரி கோவில் தெரு அருகே சென்றபோது அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள், நீதிமோகனை குண்டுகட்டாக தூக்கி கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து ராஜேந்திரன், திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நீதிமோகனை கடத்திய கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    கடத்தப்பட்ட நீதிமோகன் மாத தவணை திட்டத்தில் நிலம் வழங்குவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களால், நீதிமோகன் கடத்தப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே நீதிமோகனை விடுவிக்க கடத்தி சென்றவர்கள் ரூ.10 கோடி கேட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது கும்பகோணம் சாக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நீதிமோகன் அடைத்து வைக்கப் பட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் அங்கு வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், நீதிமோகனை அந்த வீட்டிலேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த நிலையில் சாக்கோட்டையில் உள்ள வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நீதிமோகனை நேற்று தனிப்படை போலீசார் மீட்டு, திருவாரூர் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கோட்டூரை சேர்ந்த வெங்கடாச்சலம், ஜான்கென்னடி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் வெங்கடாச்சலம், கோட்டூர் அருகே குருவாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நீதிமோகனிடம் கமி‌ஷன் அடிப்படையில் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார்.

    இதனால் திருவாரூர், கோட்டூர் பகுதிகளில் தவணை முறையில் பணத்தை வசூலித்து நீதிமோகனிடம் ஆசிரியர் வெங்கடாச்சலம் வழங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.7 கோடி வரை அவர் கொடுத்துள்ளார்.

    ஆனால் நீதி மோகன், நிலத்தை வழங்காமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் வெங்கடாச்சலத்திடம் புகார் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடாச்சலம், கூலிப்படையினருடன் நீதிமோகனை காரில் கடத்தியது தெரிய வந்தது.

    இந்த வழக்கில் மேலும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×