search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமரின் காப்பீட்டு திட்டத்துடன் தமிழக அரசின் காப்பீட்டு திட்டம் இணைப்பு
    X

    பிரதமரின் காப்பீட்டு திட்டத்துடன் தமிழக அரசின் காப்பீட்டு திட்டம் இணைப்பு

    பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் கையெழுத்தானது. #PMInsurancescheme
    சென்னை:

    தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் இயக்குனரகத்தில் பிரதமரின் ஜன் ஆரோக்கியா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு நவீன மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது.

    தற்போது இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பிரதமரின் ஜன் ஆரோக்யா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்களுடன் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் இணைத்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1.57 கோடி குடும்பங்களுக்கு 1027 சிகிச்சை முறைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வரையிலான காப்பீட்டினையும், 154 சிறப்பு சிகிச்சைகளுக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டினையும் மற்றும் 8 வகையான உயர்நிலை சிகிச்சைகளுக்கு மைய நிதியும் ஏற்படுத்தப்பட்டு அதிலிருந்து செலவினை வழங்க வழி செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் திட்டத்துடன் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டினையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதின் மூலம் தமிழகத்தில் உள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களில் உள்ள சுமார் 2.85 கோடி நபர்கள் இனி ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவையை பெற முடியும்.

    மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தகுதி பெறாத ஆனால், மத்திய அரசு திட்டத்திற்கு அடிப்படையான பொருளாதார, சாதி வாரியான கணக் கெடுப்பு புள்ளி விவரப்படி தகுதியுள்ள நபர்களுக்கும் இனி முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் கீழ் காப்பீடு அட்டை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMInsurancescheme

    Next Story
    ×