search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை
    X

    ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை

    ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பணம், நகைகள் மற்றும் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. #RTO #DVACRaid

    கடலூர்:

    லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கோடிக் கணக்கில் சொத்து குவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குதல், வாகனங்களை ஆய்வு செய்து சான்று வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    கூத்தக்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது புதிய டூரிஸ்ட் வேனுக்கு தகுதி சான்றிதழ் பெற விண்ணப்பித்து இருந்தார். கள்ளக்குறிச்சியில் தனியார் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வரும் முத்துக் குமார் மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை அணுகினார்.

    அவர் வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துக்குமார் இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    பின்னர் ரூ.25 ஆயிரத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவிடம் கொடுக்க முயன்றார். பணத்தை உதவியாளர் செந்தில் குமாரிடம் வழங்கும் படி கூறினார்.

    இதைத் தொடர்ந்து ரூ.25 ஆயிரத்தை செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் செந்தில்குமாரையும், பாபு வையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

    அவருக்கு கடலூரில் வீடு இருப்பது தெரியவந்தது. நேற்று மதியம் 2 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

     


    அப்போது குடும்பத்தினர் யாரையும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. கதவுகளை மூடிக்கொண்டு வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற் கொண்டனர். இரவு 10 மணிவரை சோதனை நீடித்தது.

    8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் பணம், 15 கிலோ வெள்ளி பொருட்கள், 200 பவுன் தங்க நகைகள், 45 வங்கி கணக்குகள், மேலும் 6 வங்கி லாக்கர்களுக்கான சாவிகள், 500-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் மற்றும் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    பாபுவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்காக எந்திரம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பணம் எண்ணப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட நகைகளின் உறுதிதண்மையை அறிய நகை மதிப் பீட்டாளர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தங்க நகைகளையும், வெள்ளி பொருட்களையும் மதிப்பீடு செய்து போலீசாரிடம் தெரிவித்தனர்.

    பாபுவுக்கு பல வங்கிகளில் 6 பெட்டகங்கள் இருப்பதும், அதில் 300 பவுனுக்கு மேல் நகைகளும், லட்சக்கணக்கான பணம் இருப்பதற்கான ஆதாரங்களும் சிக்கியது.

    மேலும் பாபுவுக்கு சென்னையில் கோடிக் கணக்கான மதிப்புள்ள பங்களா வீடு, வணிக வளாகம் இருப்பது தெரிய வந்தது. கடலூர் நகரில் மட்டும் 6 வீடுகளும், சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான காலி மனைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிவரும் பாபு பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்தது எப்படி என்பது குறித்து அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

     


    சோதனை முடிந்து இரவு 10 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியே வந்தனர். கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் பணங்களை மூட்டை மூட்டையாக கட்டிக் கொண்டும், ஆவணங்களை சூட்கேசிலும் கொண்டு சென்றனர்.

    அவற்றை இரவோடு இரவாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கைது செய்யப்பட்ட வாகன ஆய்வாளர் பாபு, உதவியாளர் செந்தில் குமார் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆய்வாளர் பாபு இதற்கு முன்பு சேலம் மற்றும் தூத்துக்குடியில் பணியாற்றி உள்ளார். அங்கு பணியாற்றிய போதும் அவர் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    பாபுவின் வங்கி கணக்குகள் மற்றும் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர். #RTO #DVACRaid

    Next Story
    ×