search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    X

    திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பவானிசாகர்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த வழியாக தினமும் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் பஸ், கார், லாரி, வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறுகிய வளைவுகளை கொண்டதால் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் பாரம் தாங்காமல் வளைவில் திரும்ப முடியாமல் நின்று விடுகின்றன. மேலும் ஒரு சில நேரம் கவிழ்ந்து விடுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

    இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு பிஸ்கட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை தஞ்சாவூரை சேர்ந்த திருமாறன் (வயது 45) என்பவர் ஓட்டினார். திம்பம் மலைப்பாதை 27-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது திடீரென லாரி நிலைதடுமாறி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் ரோட்டோரம் விழுந்து சிதறின.

    லாரி பல்டி அடித்தபடி தடுப்புச்சுவரை தாண்டி 25-வது கொண்டை ஊசி வளைவுக்கு வந்து கிடந்தது. இந்த விபத்தில் டிரைவர் திருமாறன் படுகாயம் அடைந்தார். லாரி கவிழ்ந்ததில் டேங்கரில் இருந்து டீசல் கொட்டி ரோட்டில் ஓடியது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு மாலை 3 மணி அளவில் லாரியை மீட்கும் பணி நடந்தது. இதனால் திம்பம் மலைப்பாதை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆசனூர் போலீசார் வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    மாலை 5 மணி அளவில் லாரி மீட்கப்பட்டு தூக்கி நிறுத்தப்பட்டது. அதன்பின்னரே லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து நிலமை சீராகியது.

    திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயம் அடைந்த டிரைவர் திருமாறன் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 
    Next Story
    ×