search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி ஆவணம் தயாரித்து ஜாமீன் மனு - வக்கீல். டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு
    X

    போலி ஆவணம் தயாரித்து ஜாமீன் மனு - வக்கீல். டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

    ஜாமீன் பெறுவதற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்ததால் வக்கீல், டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    கோவை:

    கோவை காந்திபுரம் சத்தி ரோட்டில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் போதை பொருளை வைத்திருந்ததாக பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல், கோவை சாய்பாபா காலனி முகமது சிகாப், குனியமுத்தூர் ஜூல்பிகர் அலி, உக்கடம் முகமது அனாஸ் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது பெங்களூரில் இருந்து இந்த போதை பொருட்களை வாங்கி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.

    கைதான 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு கோவை இன்றியமையா பொருட்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கூறி முகமது சிகாப் வக்கீல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதற்காக மருத்துவ சான்று, திருமண பத்திரிகை ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் உண்மை தன்மையை கண்டறிய போலீசாருக்கு நீதிபதி தஞ்சய் பாபா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் ஜாமீன் மனு தாக்கல் செய்த முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் இல்லை என்பதும், அவர் திருமண பத்திரிகை போலியாக அச்சடித்து மனு தாக்கல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலி ஆவணம் தயாரித்து கோர்ட்டை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்பட்ட வக்கீல் மற்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கிய டாக்டர்கள் மீது கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் வழக்கு பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பி. சந்திரசேகர் ஆஜராகி வாதாடினார்.
    Next Story
    ×