search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கோவையில் காங்.-தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கோவையில் காங்.-தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் காங்கிரஸ்.-தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #BharathBandh #PetrolDieselPriceHike

    கோவை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    தமிழகத்தில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.முழு அடைப்பு போராட்டம் நடத்திய காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தி.மு.க. பெறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மோகன் குமார்,மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் இலக்கியன் மற்றும் கொ.ம.தே.க. ஆதித் தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, த.மு.மு.க. மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பி.எஸ். சரவண குமார், நிர்வாகிகள் கணபதி சிவகுமார், சவுந்திர குமார், வீனஸ் மணி, காந்த குமார், வக்கீல் கருப்பசாமி, துளசிராஜ், தி.மு.க. சார்பில் பொறுப்பு குழு உறுப்பினர் நாச்சி முத்து, இளைஞரணி கோட்டை அப்பாஸ், பீளமேடு பி.டி. முருகேசன், கொ.ம.தே.க. கருப்பசாமி, தனபால், வடிவேல், சி.ஐ.டி.யூ. பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது-

    மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு இது வரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.

    பெட்ரோல் 85 ரூபாயாகவும், டீசல் 76 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இது அடித்தட்டு மக்களை மிகவும் பாதித்து உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி கடுமையாக உயர்ந்து இருக்கிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டது. கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் பாரதீய ஜனதாவுக்கு வருகிற தேர்தலில் மிகப்பெரிய அடி விழும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BharathBandh #PetrolDieselPriceHike 

    Next Story
    ×