search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து 21 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    ராமநாதபுரத்தில் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து 21 பவுன் நகை-பணம் கொள்ளை

    ராமநாதபுரத்தில் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூட்டிய வீடுகளை நோட்டமிடும் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம் நகர் பாரதி நகர், நேருநகர், சேதுநகர் மற்றும் ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. திருடர்களின் கைவரிசை தொடர்வதால் பொதுமக்கள் தூக்கத்தைத் தொலைத்து விடிய விடிய விழித்திருக்கும் நிலை காணப்படுகிறது.

    ராமநாதபுரம் ராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 42). இவர் சைல்டுலைன் அமைப்பில் அணி உறுப்பினராக உள்ளார்.

    இவருடைய கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.கடந்த 7-ந் தேதி ராஜேஸ்வரியின் மகள் ஜனனிக்கு திருமண நாள். எனவே வீட்டை பூட்டி விட்டு பாரதிநகரில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். வெளியில் உள்ள பூட்டை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது கதவை உடைத்து இருப்பது தெரியவந்தது.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராமேஸ்வரி கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ராமநாதபுரம் நகரில் தொடர்ந்து வரும் திருட்டு சம்பவத்தால் ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்படி தனிப் படைகள் அமைக்கப்பட்டு மாறுவேடத்தில் தனிப்பிரிவு போலீசார் வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.

    இருப்பினும் திருடர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து திருட்டில் ஈடுபட்டு வருவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து நடக்கும் இந்த திருட்டு சம்பவங்கள் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    Next Story
    ×