search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரத்தில் 25 பேரை கடித்து குதறிய வெறி நாய்கள்
    X

    தாராபுரத்தில் 25 பேரை கடித்து குதறிய வெறி நாய்கள்

    தாராபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள் ஒரே நாளில் 25 பேரை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தாராபுரம்:

    தாராபுரம் பெரிய கடை வீதி பூக்கடை கார்னர் பகுதியில் நேற்று மதியம் 3 வெறி நாய்கள் சுற்றி திரிந்தது. இந்த நாய்கள் அந்த வழியாக சென்றவர்களை கடித்து குதறியது.

    இதில் சுந்தரம் அய்யர் காலனி ஜெயந்தி, நல்லிமடம் ராமாத்தாள், பொள்ளாச்சி ரங்கநாதன், சின்ன மைதானம் அப்துல் சலாம், முகுந்தன், உப்பு துறை பாளையம் ரகுநாதன், ஜவகர் நகர் சதிஷ், சுந்தரம் அய்யர் தெரு பாபு, நேருநகர் ராஜன், மூர்த்தி, பஜனை மட தெரு சரசு, இறைச்சி மஸ்தான் தெரு பர்கத் அலி, சுப்பம்மாள் உள்ளிட்ட 25 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வெறி நாய் கடித்து காயம் அடைந்த ஜெயந்தி குழந்தை பெற்றவர். அவர் குழந்தைக்கு பால் கொடுத்து வருகிறார்.

    வெறி நாய் கடித்து உள்ளதால் சுமார் ஒன்றரை மாதத்திற்கு குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை கூறி உள்ளனர்.

    25 பேரை நாய் கடித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒரு நாயை அடித்து கொன்றனர். மற்ற 2 நாய்கள் ஓடிவிட்டது.

    தாராபுரம் மார்க்கெட் பகுதியில் இறைச்சி கடைகளுக்கு நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அங்கு இறைச்சி கடைகள் நடத்தாமல் பல்வேறு இடங்களில் இறைச்சி கடைகள் நடத்தி வருவதால் வெறி நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    மேலும் ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இது வரை ஒரு சிலரை தான் வெறி நாய்கள் கடித்தது. தற்போது ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வெறி நாய் நடமாட்டத்தை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×