search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 100 ஆண்டுகளாக வசிக்கும் இடத்தை காலி செய்ய முடியாது- பொதுமக்கள் மனு
    X

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 100 ஆண்டுகளாக வசிக்கும் இடத்தை காலி செய்ய முடியாது- பொதுமக்கள் மனு

    தஞ்சையின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இடத்தை காலி செய்ய முடியாது என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்த மனுக்களை வழங்கினர். அதனை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    பூதலூர் தாலுகா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பூதலூரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வரும் மகேந்திரன் தனது மனைவி வளர்மதி பெயரில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை தனது வீட்டு வேலை செய்ய அனுப்புகிறார்.

    மேலும் கிராம பஞ்சாயத்து பகுதியில் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்து வருகிறார். பஞ்சாயத்தில் குடிநீர் வசதி செய்ய வழங்கப்படும் குழாய்களை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு பசுமை வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யாமல் தனது உறவினர்கள் 2 பேருக்கு பசுமை வீடு கட்ட அனுமதி வழங்கியுள்ளார்.

    இதன் மூலம் அவர் ரூ.5 லட்சம் வரை முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தஞ்சை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற இருப்பதால் தஞ்சை மேல அலங்கம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறி பிள்ளையார் பட்டியில் கட்டுபட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விடும்படி மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதனால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேல அலங்கம், வட அலங்கம் பகுதியில் சுமார் 4 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களை ஸ்மார்ட் சிட்டி திட்ட விரிவாக்க பணி நடைபெறுவதால் இடத்தை காலி செய்து விட்டு பிள்ளையார் பட்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விடும் படி மாநகராட்சி அலுவலர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

    எங்களது குழந்தைகள் இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இப்பகுதியில் பலர் வேலை பார்த்து வருகின்றனர். நாங்கள் இங்கிருந்து இடமாறி சென்றால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    எனவே இந்த இடத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும். இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×