search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வை வலுப்படுத்த மு.க.ஸ்டாலின், அழகிரி இணைய வேண்டும் - மதுரை ஆதீனம்
    X

    தி.மு.க.வை வலுப்படுத்த மு.க.ஸ்டாலின், அழகிரி இணைய வேண்டும் - மதுரை ஆதீனம்

    ஸ்டாலின், அழகிரி பழைய கசப்புகளை மறந்து இணைந்து செயல்பட்டால் தி.மு.க. மேலும் வலுப்பெறும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
    வடவள்ளி:

    மதுரை ஆதீனம் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,

    நடைபெற்று வரும் குட்கா பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இதில் சி.பி.ஐ., தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்கள். சி.பி.ஐ. மத்திய அரசின் கைபொம்மையாக இருப்பதாக கூறுகிறார்கள். அது தவறு. சி.பி.ஐ. தன்னிச்சையாக இயங்கும் அதிகாரம் பெற்றது. அதற்கு என்று கட்டுப்பாடுகள் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது. சி.பி.ஐ. தனது பணியை சிறப்பாக செய்கிறது.

    தமிழகத்தில் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ். ஆட்சி சிறப்பாக உள்ளது. அதேபோன்று மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியும் சிறப்பாக உள்ளது.

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலைக்காக தமிழக அரசு ஆளுனருக்கு பரிந்துரை செய்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபையில் இது குறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றினார். நிச்சயம் 7 பேரும் விடுதலை ஆவார்கள். நித்யானந்தரால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் மறுபடியும் அவர் மதுரை ஆதீனமாக உள்ளே நுழைய முடியாது. ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மை, கண்ணியம் இருக்க வேண்டும்.

    தி.மு.க.வில் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரிக்கு இடையே ஏற்பட்ட பழைய கசப்புகளை மறந்து இணைய வேண்டும். இணைந்து செயல்பட்டால் தி.மு.க. மேலும் வலுப்பெறும்.

    ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. கமல் கட்சி, கொடி எல்லாம் அறிவித்து விட்டு செயல்படவில்லை. நடிகர்கள் அரசியல் வெற்றி பெறுவது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் மட்டுமே முடிந்தது. மற்ற நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது.

    தமிழிசை சவுந்திரராஜன் விமான பயணத்தின்போது சோபியா எழுப்பிய கோ‌ஷத்திற்கு வழக்கு, கைது அளவுக்கு சென்றிருக்க வேண்டாம். தமிழிசையும், போலீசாரும் சோபியாவுக்கு தகுந்த அறிவுரை வழங்கி சென்றிருக்கலாம்.

    பா.ஜனதா விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்தும். வரும் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார். வரும் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரமாட்டார்.

    தமிழகத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவிலில் நடைபெறும் சிலை திருட்டை தடுக்க முடியாது. சாமிக்கு சக்தி இல்லை என்று பொருள் அல்ல. மனிதர்களுக்கு பக்தி குறைந்து விட்டது என்பதுதான் சரி.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×