search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் லாரிகள் நிறுத்தம்
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் லாரிகள் நிறுத்தம்

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இன்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
    சேலம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்தது. இதனால் அந்த சங்கத்தின் கீழ் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் 4.5 லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.

    இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 34 ஆயிரம் லாரிகளும் அடங்கும். இதில் பெரும்பாலான லாரிகள் சேலம் லாரி மார்க்கெட் மற்றும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே போல தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 70 ஆயிரம் மணல் லாரிகளில் பெரும்பாலான லாரிகள் இயங்கவில்லை.

    வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வெளியூர், வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் துணிகள், இரும்பு கம்பிகள், மஞ்சள், தேங்காய், மரவள்ளி கிழங்கு மாவு, காய்கறிகள், அரிசி, நெல் மூட்டைகள் உள்பட பல்வேறு பொருட்கள் தேங்கி உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது:- டீசல் விலை உயர்வால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாடகை நிர்ணயம் செய்யும் போது டீசல் ஒரு விலையும், பொருட்கள் கொண்டு இறக்கும் போது டீசல் விலை உயர்வும் ஏற்படுவதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளதால் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதோடு 3 மாதங்களுக்கு ஒரு முறை டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றனர்.

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் 3.25 கோடி முட்டைகள் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றுமதி செய்யப்படும். முழு அடைப்பு போராட்டத்தில் முட்டை லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளதால் 3 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேங்கி உள்ளன.

    வேலை நிறுத்த போராட்டத்தால் ஒரே நாளில் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் கூறி உள்ளார்.
    Next Story
    ×