search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியரை வழியாக கேரளாவுக்கு பஸ்சில் கடத்தமுயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
    X

    புளியரை வழியாக கேரளாவுக்கு பஸ்சில் கடத்தமுயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

    செங்கோட்டையில் புளியரை வழியாக கேரளாவுக்கு பஸ்சில் கடத்தி செல்ல முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசியை வாகன சோதனையின்போது போலீசார் பறிமுதல் செய்தனர்.
    செங்கோட்டை:

    தமிழக அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரே‌ஷன் அரிசிகளை செங்கோட்டை மற்றும் தென்காசி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து காலம் காலமாக பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி பேருந்துகள் மற்றும் ரெயில் மூலம் கடத்தி அண்டை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வருவதையே ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.

    எனினும் போலீசார் இதனை கட்டுப்படுத்த பேருந்துகள், சோதனைசாவடி மூலம் தடுக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருவதுடன் அவர்களிடமிருந்து அரிசிகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குகள் போடுவதும், வாடிக்கையாகி வருகிறது.

    இந்நிலையில் செங்கோட்டை அருகே உள்ள தமிழக-கேரளா எல்லைபகுதியில் இருக்கும் புளியரை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் மற்றும் போலீசார் சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது தென்காசியில் இருந்து செல்லும் கேரளா அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்த போது பயணிகள் இருக்கைக்கு அடியில் கேரளாவுக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்த 1 டன் ரேசன் அரசிகளை சிறு, சிறு சாக்குப்பைகளில் பயணிகள் இருக்கைகளுக்கு அடியில் இருந்தது. இதையடுத்து 20 மூடைகளாக இருந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருவதால் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் இதுபோன்று அரிசி கடத்தல்காரர்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் கேரளா செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொண்டு கடத்தலை முற்றிலும் தடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×