search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சரவை தீர்மானம்: கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் - அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
    X

    அமைச்சரவை தீர்மானம்: கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் - அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #Perarivalan #RajivGandhiCase
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் கவர்னர், அவர்களை உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. தமிழக அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கதாகும். இது தமிழக அமைச்சரவையின் முடிவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமும் இதுவே.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி கவர்னருக்கு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் கவர்னர் நிராகரிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி அப்போதைய தி.மு.க. அரசு அளித்த பரிந்துரையை கவர்னர் பாத்திமா பீவி ஏற்றுக் கொண்டு தண்டனையைக் குறைத்தார் என்பது வரலாறு ஆகும்.

    எனவே, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை சர்ச்சை ஆக்காமல், அதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் கருணை மனுவை கவர்னர் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

    கடந்த பல ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவித்து தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வரலாற்று வாய்ப்பு தமிழக கவர்னருக்கு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி விரைந்து நல்லதொரு முடிவை எடுக்குமாறு கவர்னரை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கவர்னர் எடுக்க போகும் முடிவானது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும். அவரின் முடிவு, 7 பேரின் விடுதலை தொடர்பாக நடைபெற்று வந்த நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு ஒரு இறுதி முடிவாக, நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நிஜாமுதீன் உள்பட பலர் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
    Next Story
    ×