search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது- தருமபுரியில் திருநங்கைகள் மகிழ்ச்சி
    X

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது- தருமபுரியில் திருநங்கைகள் மகிழ்ச்சி

    ஓரின சேர்க்கை தண்டணைக்குரிய குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு சென்னை, தருமபுரியில் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    தருமபுரி:

    ஓரின சேர்க்கை தண்டணைக்குரிய குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு சென்னை, தருமபுரியில் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சென்னை சூளைமேட்டை சேர்ந்த சகோதரன் அமைப்பு பொது மேலாளர் ஜெயா கூறியதாவது:-

    வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட 16 அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருப்பது பெரிய வி‌ஷயமாகும்.

    இதனை நாங்கள் வரவேற்கிறோம். பல அமைப்புகளின் முயற்சியினாலும், ஆதரவாளர்களாலும், தன்னார்வலர்களின் உதவிகளினாலும் இந்த நீதி கிடைத்துள்ளது. அவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இனிவரும் காலங்களில் யார் எல்லாம் இதனை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் அனைவரும் ஏற்கக்கூடிய வகையிலும், புரிந்து கொள்ளுதலும் உருவாகியுள்ளது.

    நாங்கள் மறைத்து, பயந்து வெளியில் சொல்ல தயங்கினோம். இனி தைரியத்துடன் வெளியே வரலாம்.

    எங்களை பெற்றோர்கள் ஏற்க மறுத்த நிலையில் அவர்களும் இனி அங்கீகரிப்பார்கள். இனிவரும் காலம் வசந்த காலம். எங்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையை சேர்ந்த மணிமாலா (ஓரின சேர்க்கையாளர்) கூறியதாவது:-

    மறைந்து வாழ்க்கை நடத்திய எங்களுக்கு ஒரு வெளிப்படையான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    பெற்றோருக்கு மறைந்து, பயந்து இனி வாழத்தேவையில்லை. பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    இனி சுதந்திரமாக வெளியே வர முடியும். மன உளைச்சல் ஏற்படாது. நிம்மதியுடன் சந்தோ‌ஷமாக வாழலாம். இதனால் தேவையற்ற இறப்பு நடைபெறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையை சேர்ந்த திருநங்கை பிரியங்கா கூறியதாவது:-

    இந்த தீர்ப்பு எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. வரலாற்றில் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் வெட்கி, தலை குனியாமல் பெருமையுடன் வாழ்வோம். 30 வருடமாக போராடி கிடைத்த வெற்றி இது.

    இந்த செய்தி வந்தது முதல் ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. இனிமேல் தற்கொலை போன்ற விபரீத முடிவுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையை சேர்ந்த கார்த்திக் (ஒரினசேர்க்கையாளர்) கூறியதாவது:-

    தீர்ப்பு வந்தது முதல் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறோம். இதை செக்ஸ் ஆக கருதாமல் உணர்வாக கருதி நல்ல தீர்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    செக்சை தாண்டி, உணர்வு சம்பந்தப்பட்ட தீர்ப்பாகும். ஓரின சேர்க்கை தவறு, குற்றம் என்று கூறிய இந்த சமுதாயத்தில் இனி நாங்கள் தலைநிமிர்த்து வாழ்வோம். இனிமேல் நிறைய பேர் வெளியே வருவார்கள்.

    இந்த தீர்ப்பு காலம் கடந்து வந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக போராடி பெற்ற வெற்றியாகும்.

    இந்த நாளை, வருடத்தை மறக்க மாட்டோம். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தருமபுரி மாவட்ட திருநங்கைகள் அன்பின் நல சங்க தலைவர் கிரிஜா, ஜமாத் தலைவர்கள் சாரதா, கீதா, முனியம்மாள் ஆகியோர் கூறியதாவது:-

    ஒரின சேர்க்கையாளர் வி‌ஷயத்தில் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த வி‌ஷயத்தில் பல்வேறு சமயத்தில் வழக்குகள் நடந்துள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டில் 10 முறைக்கு மேல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

    எல்லா எதிர்ப்புகளையும் மீறி வந்துள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதற்காக தருமபுரி மாவட்ட திருநங்கைகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது செயலாளர், பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    தருமபுரி மாவட்ட திருநங்கைகள் அன்பின் நல சங்கத்தின் 415 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு அரசு வீடு கட்டி கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது. #tamilnews
    Next Story
    ×