search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐஜி மீது பெண் எஸ்பி வழக்கு- விசாகா கமிட்டியை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் உத்தரவு
    X

    ஐஜி மீது பெண் எஸ்பி வழக்கு- விசாகா கமிட்டியை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

    ஐஜி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் எஸ்பி தொடர்ந்த வழக்கில், விசாகா கமிட்டியை எதிர்மனுதாரராகச் சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VishakaCommittee
    சென்னை:

    தமிழக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரி மீது, பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் கொடுமை செய்ததாக புகார் செய்தார். இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.

    இந்த கமிட்டியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் உறுப்பினராக இல்லை என்று கூறி, இந்த விசாகா கமிட்டியை மாற்றியமைக்க கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது.

    இந்த நிலையில், தனக்கு பாலியல் கொடுமை செய்த ஐ.ஜி. மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து இடம் மாற்றம் செய்யவேண்டும். கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சூப்பிரண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி சத்ருஹன புஜாரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான தாட்சாயினி ஆஜராகி, ‘மனுதாரர் ஆகஸ்டு 17ந்தேதி புகார் செய்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாகா கமிட்டி மட்டும் அமைத்துள்ளனர். அதில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் பெண் அமைப்புகளின் உறுப்பினர்களாக உள்ளவர்களை உறுப்பினர்களாக இந்த கமிட்டியில் சேர்க்கவில்லை. எனவே, இந்த விசாகா கமிட்டியையே மாற்றி அமைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

    அப்போது குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஜி. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.தியாகராஜன், ‘மனுதாரர் பாலியல் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள விசாகா கமிட்டியிடம் கொடுக்கவில்லை. அதுவும் அந்த விசாகா கமிட்டியின் தலைவராக மனுதாரர்தான் இருந்தார்’ என்று கூறினார்.

    ‘அப்படியென்றால், மனுதாரரின் புகாரை, மனுதாரரே விசாரித்து முடிவு எடுத்துக் கொள்ளலாமா? ஐ.ஜி.யை பணியிட மாற்றம் செய்யலாமா? இதை ஒப்புக்கொண்டால், இந்த வழக்கையே வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்’ என்று வக்கீல் தாட்சாயினி வாதிட்டார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒரு வழக்கு தொடரப்பட்டு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருந்தாலும், இந்த வழக்கிற்கு அரசு தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்கிறேன் என்று கூறினார்

    அப்போது மனுதாரர் வக்கீல் தாட்சாயினி, ‘லஞ்ச ஒழிப்புப்பிரிவு அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 5-ந்தேதி வரையிலான பதிவை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘இந்த கேமரா பதிவை 2 நகல் எடுத்து, ஒன்றை விசாகா கமிட்டிக்கு கொடுத்துள்ளோம். மற்றொன்றை முத்திரையிடப்பட்ட உறையில் பாதுகாப்பாக வைத்துள்ளோம்’ என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #VishakaCommittee
    Next Story
    ×