search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் மோதலில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
    X
    மாணவர்கள் மோதலில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    திருமங்கலம் அருகே மாணவர்கள் மோதல் - அரசு பஸ் கண்ணாடி உடைப்பு பதட்டம்

    திருமங்கலம் அருகே 2 கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்திற்கு நெடுங்குளம், மைக்குடி, கீழக்கோட்டை வழியாக தினந்தோறும் காலை 7.45 மணிக்கு பெரியார் பஸ் நிலையத்துக்கு இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லணை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மைக்குடியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கல்லணையில் இருந்து புறப்பட்ட அரசு பஸ்சில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    மைக்குடிக்கு பஸ் வந்தபோது அந்த ஊரைச் சேர்ந்த மாணவர்களை பஸ்சுக்குள் ஏறவிடாமல் சில மாணவர்கள் தடுத்ததாக தெரிகிறது. கண்டக்டர் எச்சரித்தவுடன் மைக்குடி மாணவர்கள் பஸ்சுக்குள் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

    பஸ் சென்று கொண்டிருந்த போதே மைக்குடி, கல்லணை கிராம மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் மோதலாக வெடித்தது. 2 கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    இதையடுத்து பஸ் லட்சுமிபுரம் விலக்கில் நிறுத்தப்பட்டது. அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய மாணவர்கள் கற்களை வீசி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இந்த மோதலில் 2 கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி லட்சுமிபுரம் பகுதியில் மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து அந்தப்பகுதி மக்களும் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மோதலில் ஈடுபட்ட மேலக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×