search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணர் படம் அவதூறாக சித்தரிப்பு- அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்கு
    X

    கிருஷ்ணர் படம் அவதூறாக சித்தரிப்பு- அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்கு

    கிருஷ்ணர் படத்தை அவதூறாக சித்தரித்து முகநூலில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    அறந்தாங்கி:

    கிருஷ்ணர் பிறந்த நாளான செப்டம்பர் 2-ந்தேதி உலகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. அன்று கோடிக் கணக்கானவர்கள் முகநூல், வாட்ஸ்அப் மூலம் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    அதேபோல அறந்தாங்கி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் கிருஷ்ண ஜெயந்தி அன்று தனது முகநூல் பக்கத்தில் கிருஷ்ணர் ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்துள்ளதை போன்றும், அதன் கீழே சில குளிக்க வந்த பெண்கள் உடைகள் இல்லாமல் நிர்வாணமாக நிற்பதைப் போன்றும், மரக் கிளைகளில் அந்த பெண்களின் புடவைகள் தொங்குவதைப் போன்றும் உள்ள படத்தை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக பதிவு செய்திருந்தார்.

    அவரது பதிவை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த அ.தி. மு.க. பிரமுகரும், அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கி இயக்குனருமான ராஜேந்திர பிரசாத் என்பவர் ஷேர் செய்து அதன் மேல் பகுதியில் கிருஷ்ணர் அப்படித்தான் வாழ்ந்தார் என்பதைப் போன்ற பதிவையும் அவர் செய்திருந்தார்.

    இதைப்பார்த்த புதுக்கோட்டை மாவட்ட யாதவ சமுதாய நலச்சங்கத் தலைவர் சரவணமுத்து என்பவர், தங்களது குலக்கடவுளான கிருஷ்ணர் குறித்து அவதூறாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரவணன் மற்றும் ராஜேந்திர பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, முகநூல் பக்கத்தில் கிருஷ்ணர் குறித்து அவதூறாக பதிவிட்ட சரவணன் மற்றும் ராஜேந்திர பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். தலைமறைவான ராஜேந்திர பிரசாத்தை தேடி வருகின்றனர்.

    அறந்தாங்கியில் கிருஷ்ணர் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்த அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×