search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.5 லட்சம் பொருட்கள் கொள்ளை - 3 பேர் கைது
    X

    திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.5 லட்சம் பொருட்கள் கொள்ளை - 3 பேர் கைது

    திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.5 லட்சம் பொருட்களை கொள்ளையடித்ததாக இரும்பு கடை வியாபாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-1ஐ சேர்ந்தவர் மணி(வயது 53). இவருக்கு சொந்தமான வீடு, ஜக்காம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ளது. இந்த வீட்டை பூட்டிவிட்டு மணி, வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த பித்தளை குடங்கள், வெள்ளிப்பொருட்கள், லாரியின் உதிரி பாகங்கள் என மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், இந்த பொருட்களை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இதேபோல் பக்கத்தில் பூதேரியை சேர்ந்த ரகு(36) என்பவருடைய வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இது பற்றி அறிந்ததும் ரகு, வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த மின்மோட்டார், தாமிர கம்பிகள், இரும்பு பொருட்கள் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் எழிலரசி, சசி குமார், ஏட்டு மணிமாறன் ஆகியோர் விரைந்து வந்து 2 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவில் மர்மநபர்கள் அடுத்தடுத்த 2 வீடுகளில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து மணி, ரகு ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வானூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர், திண்டிவனத்தில் உள்ள மயிலம் சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வரும் வியாபாரி ராமு(28), இவருடைய உதவியாளர் சதாம்உசேன்(25) ஆகியோர் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடித்த பொருட்கள் மற்றும் அதனை கடைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×