search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழ்பவானி பகுதியில் 1000 மணல் மூட்டைகள் சிக்கின- தொடர்ந்து கண்காணிக்க கோரிக்கை
    X

    கீழ்பவானி பகுதியில் 1000 மணல் மூட்டைகள் சிக்கின- தொடர்ந்து கண்காணிக்க கோரிக்கை

    பவானி ஆற்றங்கரை பகுதிகளில் திருடப்பட்ட 1000 மணல் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து கண்காணிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கோபி:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்த போது பவானி ஆற்றங்கரை பகுதிகளில் மணல் திருட்டு நடப்பதாக புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து ஆற்றங்கரையோரம் சோதனை நடத்த கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். அதன்படி கோபி ஆர்.டி.ஓ. அசோகன் தலைமையில் 70 பேர் அடங்கிய குழுவினர் பவானி ஆற்றங்கரைகளில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை நேற்று அதிகாலை வரை விடிய விடிய நடந்தது. இந்த சோதனையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் சிக்கவில்லை.

    ஆனால் பல இடங்களில் திருடப்பட்ட மணல் மூட்டைகளாக வைக்கப்பட்டு இருந்தன. இதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த மணல் மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.

    இது தொடர்பாக கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    மணல் திருட்டு நடப்பதாக வந்த புகாரில் அடிப்படையில் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.பவானி, ஆப்பக்கூடல், கீழ்பவானி, ஜம்பை, தளவாய்பேட்டை, அத்தாணி, வைரமங்கலம், திப்பிசெட்டிபாளையம், மூலப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    இந்த திடீர் சோதனையில் கீழ்பவானி பகுதியில் பவானி ஆற்றின் கரையோரம் மணல் திருடப்பட்டு மூட்டை மூட் டையாக வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அங்கு சுமார் 1000 மூட்டை மணல் இருந்தது. அவை கைப்பற்றப்பட்டன. அந்த மூட்டைகளில் இருந்த மணல் ஆற்றின் கரையில் கொட்டப்பட்டன. அந்த மணல் இருந்த பைகள் அழிக்கப்பட்டன.

    தொடர்ந்து இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பவானி தாசில்தார் சிவகாமி, பவானி டி.எஸ்.பி. சார்லஸ் தலைமையில் 3 குழுக்களாக போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    திப்பிசெட்டிபாளையம் அருகே நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஆற்றங்கரையோரத்தில் நடமாடிய இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்கள் புகார் அளித்ததும் அதிகாரிகள் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்த்த மணல் திருடர்கள் மணல் எடுக்க ஆற்றங்கரைக்கு வரவில்லை என்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் மினி ஆட்டோ, டிராக்டர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை ரகசிய இடத்தில் வைத்ததும் தெரிய வந்துள்ளது.

    அவர்கள் அதிகாரிகளிள் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. மணல் திருட்டை தடுக்கும் நடவடிக்கையை வருவாய் துறையினர் கைவிட்டு பிற பணிகளில் கவனம் செலுத்தும்போது மீண்டும் மணல் கடத்தலை அவர்கள் தொடங்கலாம் என கருதப்படுகிறது.

    எனவே ஆற்றங்கரை பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட கோரிக்கை எழுந்துள்ளது. #tamilnews
    Next Story
    ×