search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி
    X

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி

    பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. குறிப்பாக பவானி ஆற்றுப்பகுதியில் அதிகம் வாழைகளை பயிரிடப்படுகிறது. வாழைகள் நன்கு காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்தபோது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டியது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரம் பயிரிட்டிருந்த வாழைகள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாரான வாழை குலைகளை அறுவடை செய்ய முடியாமல் போனதால் வாழைகள் அழுகி நாசமானது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் வாழை நல்ல விளைச்சலை கண்டது. பெரும்பாலும் ஓணம் திருவிழாவிற்காக கதளி, நேந்திரன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, தேன் வாழைகள் அதிகம் பயிரிடப்பட்டிருந்தன. கேரளாவில் மழை காரணமாக ஓணம் ரத்து செய்யப்பட்டது.

    கேரளாவுக்கு என்றே பயிரிட்ட வாழைகள் ஏற்றுமதி செய்யமுடியாமல் தேக்கம் அடைந்தது. சுற்றுப்புற பகுதிகளில் விளையும் வாழைகள் மேட்டுப்பாளையம் வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. கேரளாவுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் வாழை விலை மற்றும் விற்பனை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த வருடம் இதே நேரத்தில் ஒரு கிலோ நேந்திரன் விலை ரூ.55 ஆக இருந்தது. தற்போது ரூ.32-க்கு மட்டுமே விற்பனையாகிறது.

    இதேபோன்று கதளி, நேந்திரன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, தேன் வாழை ஆகியவைகளின் விலையும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    தற்போது நேந்திரன் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.32 வரையும், கதளி ரூ.25-ல் இருந்து ரூ.55 வரையும், பூவன் (ஒரு தார்) ரூ.600 முதல் ரூ.900 வரையும், ரஸ்தாளி ரூ.200 முதல் ரூ.600 வரையும், செவ்வாழை ரூ.1000 முதல் ரூ.1200 வரையும், தேன் வாழை ரூ.500 முதல் ரூ.600 வரையும் ஏலம்போனது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கேரளாவுக்கு இந்த நேரத்தில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் தார்கள் வரை ஏற்றுமதி செய்யப்படும். சுமார் 20 ஆயிரம் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இது தவிர பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் பகுதி வாழைகள் நாசமானது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழை ஒன்றுக்கு ரூ.150 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×