search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ராமச்சந்திரன்
    X
    கைதான ராமச்சந்திரன்

    தியாகதுருகம் அருகே இளம்பெண் கொலை- வாலிபர் கைது

    தியாகதுருகம் அருகே இளம்பெண்ணிடம் நகையை பறிக்கும் போது திட்டியதால் கொலை செய்ததாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லதா (வயது 27). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு லதா தனது விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அங்கு வந்த சிலர் லதாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு அவரது கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த லதாவை உறவினர்கள் மீட்டு தியாகதுருகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முயன்றனர்.

    அப்போது லதா ஒரு பேப்பரில் தன்னிடம் உள்ள நகைகளை பறித்தவர்கள் பற்றிய விவரங்களை எழுதி கொடுத்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தியாக துருகம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். லதாவின் கழுத்தை அறுத்து நகையை பறித்த மர்ம மனிதர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

    அதனை தொடர்ந்து லதா இறப்பதற்கு முன்பு பேப்பரில் எழுதி குறிப்பிட்டிருந்த பெரியமாம்பட்டை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ராமச்சந்திரன் (23) என்ற வாலிபரை போலீசார் பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் எனக்கும், இந்த கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என வாக்குவாதம் செய்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்கள் பாணியில் விசாரித்தனர்.

    அப்போது அவர் லதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்ததையும், அவரது கழுத்தை அறுத்ததையும் ஒப்புக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் ராமச்சந்திரனை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்த லதா தனது வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது நானும், மேலும் 2 பேரும் அங்கு சென்றோம். லதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றோம். அப்போது லதா எங்களை கடுமையாக திட்டினார். இதனால் நாங்கள் ஆத்திரம் அடைந்தோம். லதாவை உயிருடன் விட்டால் நாங்கள் மாட்டிக்கொள்வோம் என நினைத்தோம். பின்னர் லதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, தாலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டோம்.

    இந்த சம்பவத்தால் என் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக கையில் உள்ள ரத்தக்கரையை தண்ணீரால் கழுவினேன். பின்னர் எதுவும் நடக்காதது போல் அந்த பகுதியில் சுற்றி வந்தேன். ஆனால், போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு கூறினார்.

    மேலும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

    சக்திவேல் பிடிபட்டால்தான் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது தெரியவரும்.

    Next Story
    ×