search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 15 பவுன் நகை அபேஸ்
    X

    போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 15 பவுன் நகை அபேஸ்

    மதுரையில் போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் 10 பவுன் நகையை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை அய்யர்பங்களா கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்தவர் குருசாமி மனைவி வள்ளி(வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது டிப்-டாப் உடைஅணிந்த 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தங்களை மப்டி போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் வள்ளியிடம் இந்த பகுதியில் திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. ஆனால் நீங்கள் இவ்வளவு நகை அணிந்து கொண்டு சர்வசாதாரணமாக நடந்து செல்கிறீர்கள். எனவே நகையை கழற்றி கொடுங்கள். அதனை பேப்பரில் மடித்து கொடுக்கிறோம். வீட்டில் சென்று அதனை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

    அதை நம்பி வள்ளியும் தான் அணிந்திருந்த 10 பவுன் செயின், 5 பவுன் வளையல்களை அவர்களிடம் கழற்றி கொடுத்தார். அவர்களும் அந்த நகைகளை வாங்கி பேப்பரில் மடித்து அவரிடம் கொடுத்தனர். பின்னர் அவர் வீட்டிற்கு சென்று பேப்பரை திறந்து பார்த்த போது அதில் அவருடைய நகைகளை காணவில்லை. அதற்குபதிலாக பேப்பரில் சிறிய கற்களும், பித்தளை வளையல்களும் இருந்தன. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வள்ளி உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு தல்லாகுளம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அந்த நபர்கள் குறித்து விசாரித்தனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 15 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×