search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல் கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடியதால் பரபரப்பு
    X

    திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல் கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடியதால் பரபரப்பு

    திருச்சியில் அ.தி.மு.க. நிர்வாகி வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி கருமண்டபம் வசந்தநகரை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 52), திருச்சி மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி செயலாளரான இவர், புத்தூர் நகர கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். நேற்றிரவு இவர் பணி நிமித்தமாக வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்தார்.

    இந்தநிலையில் இரவு 10-30மணியளவில் அங்கு 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். கையில் அரிவாள், கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள், வீட்டின் கதவை தட்டி உள்ளேயிருந்தவர்களை அழைத்தனர். அப்போது வெளியே வந்த பத்மநாபனின் மனைவி ,பயங்கர ஆயுதங்களுடன் நின்ற நபர்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது அந்த நபர்கள், பத்மநாபன் மனைவியிடம், உனது கணவரை ஒழுங்காக இருக்கச்சொல்.இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து பத்மநாபனுக்கு அவரது மனைவி போன் செய்ய முயன்றதையடுத்தும், வீட்டில் வளர்த்து வந்த நாய் குரைக்கவும், மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதனிடையே மனைவி போன் செய்ததையடுத்து பத்மநாபன், உடனடியாக கண்டோன்மெண்ட் உதவி கமி‌ஷனர் சிகாமணியிடம் புகார் தெரிவித்தார். அவர் மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி பிடிக்க உத்தரவிட்டதையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தையடுத்து பத்மநாபன் வீட்டில் நேற்றிரவு முழுவதும் போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் யாரென்று கண்டுபிடிப்பதற்காக, கருமண்டபம் பகுதியில் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூட்டுறவு சங்க தேர்தலில் உள்கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பத்மநாபனுக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனிடையே பத்மநாபன் வீட்டிற்கு வந்த நபர்கள், பேப்பரால் சுற்றப்பட்ட ஒரு மர்மபொருளை கொண்டு வந்துள்ளனர். அது வெடிகுண்டாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அ.தி.மு.க. நிர்வாகி வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பத்மநாபன் கூறும் போது, தேர்தல் தோல்வியில் விரக்தியடைந்தவர்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட செயலாளர் குமார் எம்.பி.யிடம் தெரிவித்து போலீசிற்கும் புகார் தெரிவித்துள்ளோம். நாங்கள் நேர்வழியில் செல்கிறோம்.யாருக்கும் பயப்படமாட்டோம். காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×