search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் மீன் வியாபாரி கொலை: அடித்த அவமானத்தில் வெட்டிக் கொன்றோம்- வாலிபர்கள் வாக்குமூலம்
    X

    சேலத்தில் மீன் வியாபாரி கொலை: அடித்த அவமானத்தில் வெட்டிக் கொன்றோம்- வாலிபர்கள் வாக்குமூலம்

    கோவில் விழாவில் அடித்ததால் அவமானத்தில் வெட்டிக் கொன்றதாக மீன் வியாபாரி கொலை வழக்கில் கைதான வாலிபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    சேலம்:

    சேலம், அழகாபுரம், பெரியபுதூர் எம்.டி.எஸ். நகரை சேர்ந்தவர் மாது. இவரது மகன் வெங்கடேசன் (வயது 33). மீன் வியாபாரியான இவர் அஸ்தம்பட்டி சாரதா கல்லூரி சாலையில் உள்ள சுற்றுலா மாளிகை எதிரில் கடந்த மாதம் 22-ந்தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த கொலை தொடர்பாக கடந்த 22-ந்தேதி அன்று திருச்சி ஜே.எம்.நீதிமன்றம் எண்.5-ல் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் அஜித்குமார்(26), மாதவன் மகன் ராமு(34) ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நாகப்பன் உத்தரவிட்டார். அதன்படி 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையறிந்த அஸ்தம்பட்டி போலீசார், வாலிபர்கள் அஜித்குமார், ராமு ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக, போலீஸ் காவல் கேட்டு வழக்கு ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து மாஜிஸ்திரேட், 2 பேரையும் 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நேற்று இரவு ஜெயிலில் இருந்து அஜித்குமார், ராமு ஆகிய இருவரையும் போலீசார் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    அஜித்குமார் தரப்பினரும், கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் தரப்பினரும் ஒரு கட்டத்தில் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் கொலை, அடி-தடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.இதில் வெங்கடேசன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் அவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றார்.

    பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் இவர்களது ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போலீசார் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். திருந்தி வாழுமாறு கூறி அறிவுரையும் வழங்கினார்கள்.

    இதில் வெங்கடேசன் மட்டும் திருந்தி வாழ தொடங்கினார். தனது நண்பர்களிடம் இருந்து விலகி தனியாக மீன்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் வெங்கடேசன் திருந்தி விட்டார். நாம் மட்டும் கெட்டவனாக இருக்கிறோம் என்ற ஆதங்கம் அவர்களது நண்பர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்தது. போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக அஜித்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பினர் வந்திருந்தனர். அங்கு மற்றொரு தரப்பான அஜித்குமார் அண்ணன் ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்களும் நின்று கொண்டி ருந்தனர். வெங்கடேசனை கண்டதும் அவர்களுக்கு கோபம் கொப்பளித்தது. அங்கு வைத்து இரண்டு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், ரஞ்சித்தை அடித்து விட்டார். கோவில் விழாவில் பொதுமக்கள் மத்தியில் வைத்து தாக்கியதால் ரஞ்சித் மற்றும் அவரது தரப்பினர் இதை ஒரு அவமானமாக கருதினர்.

    தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து ரஞ்சித் தனது தம்பி அஜித்குமாரிடம் தெரிவித்தார். அதற்கு அவர், நான் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அவனை பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதன்படி, சில நாட்கள் கழித்து ஜெயிலில் இருந்து வெளியே வந்த வந்த அஜித்குமார் நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேசனை தீர்த்துக் கட்டினார் என்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கரூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×