search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயணிகள் ஆர்வத்துடன் பயணம் - நவீன எல்.எச்.பி பெட்டிகளுடன் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்
    X

    பயணிகள் ஆர்வத்துடன் பயணம் - நவீன எல்.எச்.பி பெட்டிகளுடன் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்

    தென் மாவட்டத்தில் இருந்து நெல்லை வந்த நவீன எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் ஆர்வமாக பயணம் செய்தனர்.
    நெல்லை:

    தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில்களில், ஐ.சி.எப். தயாரிப்பிலான பழைய ரெயில் பெட்டிகளை மாற்றி அதிநவீன பெட்டியான எல்.எச்.பி. பெட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. தற்போது தென் மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் ரெயில்கள் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிநவீன ரெயில் பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.

    நேற்று சென்னை எழும்பூரில் இந்த ரெயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் பொருத்தப்பட்டன. இதில் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தார்கள். இந்த ரெயில் இன்று காலை நெல்லை வந்தது. நெல்லை பயணிகள் இந்த நவீன பெட்டிகளை ஆர்வத்துடன் பார்த்தனர். இதில் 2 அடுக்கு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டி ஒன்றும், 3 அடுக்கு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள் 6, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 11, பொது பெட்டிகள் 3, 2 ஜெனரேட்டர் பெட்டிகள் இடம்பெற்றிருந்தன.

    ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த வகை பெட்டிகளின் எடை 52 டன்னுக்கும் குறைவானது. இதனால் மணிக்கு 160 கி.மீ வேகத்துடன் இந்த ரயில் பெட்டிகளை எளிதாக இயக்க முடியும். பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதும், விபத்து நேரங்களில் எளிதாக கவிழ்ந்து விடாமல் தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்பக்கூடிய பயணி பெட்டிகள் என்பதால் இனிமேல் ரெயில் பயணிகளுக்கு கூடுதல் அமைதியை வழங்க கூடியதாகவும் இந்த வகை பெட்டிகள் அமைந்துள்ளன.

    இந்த பெட்டிகளில் நவீன வாஷ்பே‌ஷன்கள், கழிவறைகள் உள்ளன. படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் கூடுதலாக 8 பெர்த் என மொத்தம் 80 படுக்கைகள் இடம்பெற்று உள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து நாளை முதல் செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் இத்தகைய நவீன பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. அதிவேகத்தில் செல்லும் வகையில் இந்த பெட்டிகள் உள்ளதால் இரட்டை ரெயில் பாதை வந்த பின்னர் நெல்லையில் இருந்து சென்னைக்கு பயண நேரம் மேலும் மிச்சமாகும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
    Next Story
    ×