search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 19 லட்சத்து 34 ஆயிரம் வாக்காளர்கள்
    X

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 19 லட்சத்து 34 ஆயிரம் வாக்காளர்கள்

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 34 ஆயிரத்து 221 வாக்காளர்கள் உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 34 ஆயிரத்து 221 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.



    மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜானகி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேல், அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.

    பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தற்போது ஆண்கள் 9 லட்சத்து 54 ஆயிரத்து 913 பேர், பெண்கள் 9 ஆயிரத்து 79 ஆயிரத்து 243 பேர் மற்றும் இதர பிரிவினர் 65 பேர் என மொத்தம் 19 லட்சத்து 34 ஆயிரத்து 221 வாக்காளர்கள் உள்ளனர்.

    வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு, சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தற்போது முதல் தொடங்குகிறது. 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று வரை பிறந்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்தல், திருத்தம், நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்ய வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வாக்குச்சாவடி மையம், தாசில்தார் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் இதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் வருகிற 8-ந் தேதி, 22-ந் தேதி, அக்டோபர் மாதம் 6-ந் தேதி மற்றும் 13-ந் தேதி ஆகிய தேதிகளில் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும். அன்று அந்தந்த பாகத்தின் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் சரிபார்த்து கொள்ளலாம்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் வருகிற 9-ந் தேதி, 23-ந் தேதி, அக்டோபர் மாதம் 7-ந் தேதி, 14-ந் தேதி நடைபெறும். அன்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க தேவையான படிவங்கள் பெற்று ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை பெறப்படும் படிவங்கள் அனைத்தும் கள விசாரணை செய்யப்பட்டு வருகிற ஜனவரி 4-ந் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கலெக்டர், திருவண்ணாமலை ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள டான்காப் கிடங்கில் அமைக்கப்பட்டு உள்ள வைப்பு அறையில் பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவின் போது வாக்காளர்கள் தங்கள் வாக்குபதிவினை சரிபார்க்கும் எந்திரங்கள் 3200 ( voter verifiable paper audittrial ) அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வைக்கப்படுவதை தொடங்கி வைத்தார். இந்த வைப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் பணியாளர்கள் எந்திரங்களை தூக்கி சென்றனர். மேலும் தொடர்ந்து அந்த வைப்பு அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×