search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலத்தில் கார் விபத்து: அரிசி ஆலை அதிபர் பலி
    X

    திருமங்கலத்தில் கார் விபத்து: அரிசி ஆலை அதிபர் பலி

    லாரி மீது கார் மோதிய விபத்தில் அரிசி ஆலை அதிபர் உடல் நசுங்கி பலியானார்.

    பேரையூர்:

    தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் வன்னியராஜன். இவருடைய மகன் கமல் (வயது 40) அரிசி ஆலை அதிபர்.

    இவரது மனைவி பிரகன்யா (35), மகள் கிரிஸ்தாலா (5), மகன் கிரிஸ் வன்னியராஜ் (4). இவர்கள் தூத்துக்குடியில் இருந்து காரில் சென்னைக்கு சென்றனர். அங்கு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மகள் திருமணத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் அனைவரும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். கமல் காரை ஓட்டினார். இன்று அதிகாலை 4.30 மணி யளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் 4 வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது கரிசல்பட்டி பகுதியில் ஊட்டியில் இருந்து மார்த்தாண்டம் சென்ற டீ தூள் லாரி சாலையில் நின்றது. இதனை காரை ஓட்டிவந்த கமல் கவனிக்கவில்லை. இதனால் வேகமாக வந்த கார் லாரியின் பின்னால் மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன் பகுதி உருக்குலைந்தது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த கமல் மற்றும் பிரகன்யா இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

    சுமார் 1 மணி நேரம் போராடிய பின்பு, காருக்குள் சிக்கிய கமலின் உடலையே மீட்க முடிந்தது. அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். அவரது மனைவி பிரகன்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். குழந்தைகள் இருவரும் லேசான காயத்துடன் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×