search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
    X

    சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

    கரூரில் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது சின்னதேவன்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கவேல் பேசுகையில், நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை போதுமானதாக இல்லை. களை எடுப்பது, மருந்து தெளிப்பது என நெல் சாகுபடிக்கு செலவு அதிகம் ஆகிறது. எனவே நெல் கொள்முதல் விலையினை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் உழைத்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். காவிரியில் உபரியாக செல்லும் நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க வேண்டும். இதற்காக குழாய் மூலம் நீரை கொண்டு வந்து கடவூர் பகுதியிலுள்ள ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயம் செழிப்பதோடு, குடிநீர் பிரச்சினையும் எளிதில் தீர்ந்துவிடும் என்று கூறினார்.

    நெரூர் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கருமலை பேசுகையில், கடம்பங்குறிச்சியில் இருந்து நன்னியூர் வழியாக செல்லும் ராஜவாய்க்காலில் தண்ணீரை தேக்கி வைக்கும் மதகு உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் காவிரி ஆற்று உபரிநீர் ராஜவாய்க்காலில் அதிகளவு வந்ததால், இந்த மதகுக்கு முன்புறமாக ஆங்காங்கே போடப்பட்ட சிறிய தடுப்பணைகள் உடைந்து சேதமடைந்து விட்டது. அதனை சரி செய்து தர வேண்டும். மேலும் காவிரி ஆறு, நெரூர் வாய்க்காலின் கரைகளில் ஆயில் என்ஜின் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    கரூரை சேர்ந்த விவசாயி சண்முகம் பேசுகையில், கரூர் அமராவதி ஆற்றங்கரையோரமாக கொட்டப்படும் கழிவுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கழிவுநீரை ஆற்றுக்குள் திறந்து விடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்பள்ளி வாய்க்காலை தூர்வாராத காரணத்தினால் அப்பகுதியில் தண்ணீர் செல்ல முடிவதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமாநிலையூர் வாய்க்கால் உள்ளிட்டவை தூர்வாரப்படவில்லை. தாந்தோன்றிமலை ராஜவாய்க்காலை 30 ஆண்டுகளாக காணவில்லை. தூர்ந்து போய் விட்டது என்று கூறினார். உடனே எழுந்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், என்னுடன் வாருங்கள் தூர்வாரிய இடத்தையெல்லாம் காண்பிக்கிறேன் என கூறி அந்த குற்றசாட்டை மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ராமலிங்கம் பேசுகையில், கரூரில் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கக்கோரி கடந்த 2003-2004-ம் ஆண்டில் சென்னையிலுள்ள இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் அந்த இழப்பீட்டு தொகை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் செப்டம்பரில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் போராட்டம் நடத்தப்படும். சணப்பிரட்டி பகுதியில் உள்ள குடிநீர் கிணறு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. அந்த கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் உள்ளிட்டவை சேதமடைந்து, ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அது சீர் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் தண்ணீர் பிரச்சினையால் அவதியடைகின்றனர். எனவே அந்த குடிநீர் கிணற்றை சீர் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    மேலும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். அமராவதி, காவிரி ஆற்றங்கரையோரமாக இயங்கும் சாயப்பட்டறைகளில் அடிக்கடி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக ஆற்றில் சாயக்கழிவு திறந்து விடப்படுகிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நரிக்காட்டுவலசு ராஜமாணிக்கம், ஆண்டிப்பாளையம் நல்லுசாமி, கீழவெளியூர் ராஜூ உள்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பேசினர். முடிவில் இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் பதில் கூறினார். இந்த கூட்டத்தில் வேளாண்மைதுறை இணை இயக்குனர் ஜெயந்தி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×