search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி அருகே தொழிலாளி பலி: பன்றி காய்ச்சல் பாதிப்பு வேறு யாருக்கும் இல்லை- அதிகாரி விளக்கம்
    X

    பவானி அருகே தொழிலாளி பலி: பன்றி காய்ச்சல் பாதிப்பு வேறு யாருக்கும் இல்லை- அதிகாரி விளக்கம்

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே பன்றி காய்ச்சல் பாதிப்பு வேறு யாருக்கும் இல்லை என சுகாதார துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 66). மஞ்சள் பைகளுக்கு சாயமேற்றும் தொழிலாளி.

    சளி தொல்லையாள் இவர் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை சோதித்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அவர் சிசிச்சை பலனின்றி கடந்த வாரம் இறந்தார். இதையடுத்து அவர் வசித்து வந்த பாரதிநகர் பகுதி மக்கள் மத்தியில் பன்றி காய்ச்சல் பீதி ஏற்பட்டது.

    எனவே சுகாதாரதுறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். முருகன் வசித்து வந்த பாரதி நகருக்கு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த குழுவினர் அந்த பகுதியில் வேறு யாருக்காவது பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

    ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:-

    பன்றி காய்ச்சலால் இறந்த முருகன் அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்துள்ளார். எனவேதான் அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் முகாமிட்டு ஆய்வு நடத்தினர். காய்ச்சல் உள்ளிட்ட பிற பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் முழுமையாக பரிசோதித்தோம். ஆனால் வேறுயாருக்கும் பன்றி காய்ச்சல் பாதிப்பு, அறிகுறிகள் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்.

    தும்மல், இருமல் மூலமாக மனிதர்களால்தான் இந்த காய்ச்சல் பரவும். பன்றிகள் மூலம் பன்றி காய்ச்சல் பரவுவதில்லை. இறந்த முருகன் வசித்த பகுதியில் பன்றிகள் இல்லை.

    மருத்துவ குழுவினர் தேவைப்பட்டவர்களுக்கும், பிற நோய் பாதிப்பு இருந்தவர்களுக்கும் மருந்துகள் வழங்கினர். மாவட்டத்திலும் வேறெங்கும் பன்றி காய்ச்சல் பாதிப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×