search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு தமிழக அரசு என்றைக்கும் துணை நிற்கும்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
    X

    விவசாயிகளுக்கு தமிழக அரசு என்றைக்கும் துணை நிற்கும்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

    ரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைக்கின்ற விவசாயினுடைய நலன் மேம்பாடு அடைய அரசு என்றென்றைக்கும் துணை நிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், அனுப்பூர் கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அம்மா பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, இறகு பந்து விளையாடினார். இதனை தொடர்ந்து அங்கு ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, உடற்பயிற்சி செய்து பார்த்தார்.

    இவ்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் பல்வேறு கிராமங்களில் அம்மாவின் அரசு அமைத்து கொடுத்துள்ளது.


    நம்முடைய மாவட்டம் இன்றைக்கு ஒரு முன்னோடி மாவட்டமாக திகழக் கூடிய அளவிற்கு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்றைக்கு தமிழகத்திலேயே 32 மாவட்டங்கள் இருந்தாலும் நம்முடைய மாவட்டங்களை சேர்ந்தவர் தான் தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இன்றைக்கு இங்கே நிற்கின்றேன்.

    அம்மாவுடைய நல்லாசியோடு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு உங்களுடைய அன்போடு, உங்களுடைய ஆதரவோடு, இன்றைக்கு தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இருக்கின்ற பொறுப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது.

    ஒரு முதல்-அமைச்சர் ஒரு கிராமத்திற்கு வருவார் என்றால் மிக அரிது. நான் ஏற்கனவே பல முறை இந்த பகுதிக்கு வந்து சென்றிருக்கின்றேன். நம்முடைய மாவட்டம் முழுவதும் நான் சென்று வந்திருக்கின்றேன்.

    ஏற்காடு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மலை பகுதியும் சரி, அதன் கீழ் இருக்கின்ற கிராம பகுதியும் சரி, பேரூராட்சியில் இருக்கின்ற பகுதிகளும் சரி எல்லா இடத்திற்கும் நான் வந்து சென்றிருக்கின்றேன்.

    2011-ல் அம்மாவுடைய அமைச்சரவையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது இந்த பகுதிகளில் சாலைகள் எல்லாம் சிறப்பாக அமைத்து கொடுத்திருக்கின்றேன்.

    நான், இங்கே வருகின்றபோது, விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கையை வைத்தார்கள். அதெல்லாம் அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

    கிராம புற மக்களுடைய வாழ்வாதாரம் முன்னுக்கு வரவேண்டும். கிராமத்தில் இருக்கின்ற மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக கிடைக்கப் பெற வேண்டும். அதுதான் அம்மாவுடைய அரசின் லட்சியம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

    நகரத்தில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன? என்ன? அடிப்படை வசதிகள் கிடைக்கின்றதோ, அதுபோல் கடைக்கோடி கிராமத்தில் வாழுகின்ற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரம் சிறக்க வேண்டும் என்பது தான் அம்மாவுடைய ஆட்சியினுடைய திட்டம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் ஒரு விவசாயியாக இருந்தவன். இன்றைக்கும் விவசாய தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

    ஆகவே விவசாய பிரச்சனை எந்த அளவுக்கு கடினமானது என்பது பற்றி நான் உணர்ந்தவன். அதுபோல் விவசாய தொழில் எந்த அளவுக்கு சிரமம் என்பதையும் நன்கு அறிவேன்.

    விவசாய பணியில் ஈடுபடுகின்றது எவ்வளவு துன்பம், கஷ்டம் என்பதை நான் நன்கு அறிவேன். ஆகவே எந்த துறையிலும் இவ்வளவு கஷ்டம் கிடையாது. வெயில், மழையிலே நனைந்து பணியாற்றக் கூடியவன் விவசாயி மற்றும் விவசாய தொழிலாளி ஆவார்கள்.

    ரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைக்கின்றவன் விவசாயி. அப்படி உழைக்கின்ற விவசாயினுடைய நலன் மேம்பாடு அடைய அரசு என்றென்றைக்கும் துணை நிற்கும். அவர்களுக்கு தேவையான திட்டங்களை வகுத்து அளிக்கும். எல்லா பகுதிகளிலும் விவசாயம் முன்னுக்கு வரவேண்டும்.

    விவசாயம் செழிப்பாக இருந்தால் தான் நாடு செழிப்படையும். அந்த செழிப்பான ஆட்சி அம்மாவுடைய ஆட்சியிலேயே கிடைக்கும்.

    கிராமம் முன்னுக்கு வரவேண்டும். கிராமத்தில் வாழுகின்ற மக்களுக்கு என்ன? என்ன? தேவை என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை வகுத்து அந்த திட்டத்தின் மூலமாக கிராம பொருளாதாரம் மேம்பாடு அடைய அரசு வழிவகுக்கிறது.

    வேளாண்மை துறை இந்திய அளவில் தமிழகத்தில் தான் சிறந்து விளங்குகின்றது. வேளாண் உற்பத்தி, உணவு தானிய உற்பத்தி அதிக அளவு உற்பத்தி செய்து தேசிய விருது பெற்ற அரசு அம்மாவுடைய அரசு. எல்லாதுறையிலும் இன்றைக்கு முன்னணி வகித்து கொண்டிருக்கிறது.

    மக்களுடைய குறைகளை போக்குவதே எங்களுடைய லட்சியம். அதற்காக அம்மாவுடைய அரசு தொடர்ந்து பாடுபடும்.

    வாழ்வாதாரம் முன்னுக்கு வர, அடிப்படை வசதிகள் கிராமத்திற்கு வழங்க அம்மாவுடைய அரசு தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்து சிறப்பான வரவேற்பு அளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    Next Story
    ×