search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வெள்ளம் பாதிக்கும் பகுதிகள் கணக்கெடுப்பு பணி
    X

    தஞ்சையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வெள்ளம் பாதிக்கும் பகுதிகள் கணக்கெடுப்பு பணி

    விரைவில் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை அடுத்த கல்விராயன்பேட்டை பகுதியில் கல்லணை கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    இதேபோல் அய்யம்பேட்டை பகுதியில் கரை உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இங்கும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமானது.

    கரைகள் அடிக்கடி பல மிழந்து உடைப்பு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் இன்னும் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியும் வருகின்றனர்.

    தஞ்சை மாவட்ட நிர்வாகமும், பொதுப் பணித்துறையும் செயலற்று போனதாக விவசாயிகள் குமுறி வருகின்றனர். கோடை காலத்தில் ஆறு, குளங்கள், ஏரிகளை தூர்வாராமல் தண்ணீர் வரும் போது தூர்வாரி என்ன பயன்? தூர்வாரும் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக பல்வேறு விவசாய சங்கங்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பருவ மழை விரைவில் தொடங்க இருக்கிறது. தஞ்சை மாவட்டம் கடலோர மாவட்டங்களில் ஒன்றாக இருப்பதால் தமிழக அரசின் நீர் மேலாண்மை துறையின் உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    அதாவது காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், அக்னியாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வானிலை ஆய்வுத்துறை மாணவர்கள் மூலம் ஆளில்லா குட்டி விமானம் துல்லியமாக அளவிடும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் வெள்ளம் ஏற்படும் பகுதிகளை அதற்கேற்ப முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×