search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க கோரி வழக்கு- வேறு டிவிசன் பெஞ்சுக்கு மாற்றம்
    X

    விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க கோரி வழக்கு- வேறு டிவிசன் பெஞ்சுக்கு மாற்றம்

    பாலியல் புகார்கள் பற்றி விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவை வேறு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
    சென்னை:

    பாலியல் புகார்கள் பற்றி விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவை மாற்றியமைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையில் பெண் காவலர்கள், பெண் அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டி.ஜி.பி. அருணாச்சலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் ஓய்வுபெற்ற எஸ்.பி. சரஸ்வதி அடங்கிய குழுவை அமைத்து கடந்த 17-ந்தேதி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குழு சட்டப்படி அமைக்கப்படவில்லை எனக்கூறி, சென்னை சூளை மேட்டைச் சேர்ந்த வக்கீல் பிரேம் ஆனந்த் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    சட்டப்படி விசாகா குழுவில் ஒரு தலைமை அதிகாரியும் குறைந்தது மூன்று உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பெண்கள் அமைப்பு அல்லது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

    ஆனால் டி.ஜி.பி. அமைத்துள்ள இந்த குழுவில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை. மேலும் இந்த குழு உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் சட்டவிதிகளை பின்பற்றி, விசாகா குழுக்களை அமைக்க உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்துறை செயலாளர்களுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை வேறு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. #tamilnews
    Next Story
    ×