search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சி முடிவுக்கு வரப்போவதால் முதலமைச்சர் பழனிசாமி கோவில்-கோவிலாக செல்கிறார்: டிடிவி தினகரன்
    X

    ஆட்சி முடிவுக்கு வரப்போவதால் முதலமைச்சர் பழனிசாமி கோவில்-கோவிலாக செல்கிறார்: டிடிவி தினகரன்

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரப்போவதால் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவில், கோவிலாக செல்வதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #EdappadiPalaniswami
    தஞ்சாவூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. இதனால் தான் கோவில், கோவிலாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு நல்லவிதமாக வரும். அப்போது இந்த ஆட்சிக்கு முடிவு வரும்.

    ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றி, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் பிரதிபலிக்கும். குக்கர் சின்னம் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

    டெல்டா மாவட்டங்களில் ஆறு, குளங்களை தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.600 கோடி, தண்ணீரோடு போய் விட்டது. எந்த திட்டத்திலும் ஊழல் இருக்கும். ஆனால் ஊழலுக்கு என்று உள்ள திட்டம் தான் தூர்வாரும் திட்டம். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


    தி.மு.க.வில் திடீர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் காவி மயம், பகல் கொள்ளை ஆட்சி பற்றி பேசியுள்ளார். ஸ்டாலின் திடீரென ஞானோதயம் பிறந்தது போல் பேசி வருகிறார்.

    ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் அமித்ஷா வீட்டுக்கு போய் கருணாநிதி இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். ஆனால் அவரால் வரமுடியவில்லை. இதனால் தான் மு.க.ஸ்டாலின் விரக்தியில் காவி மயத்தை பற்றி பேசி வருகிறார். பகல் கொள்ளை ஆட்சி என்பது ஸ்டாலினுக்கு முதலிலேயே தெரியாதா?

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று கையை பிடித்து ஸ்டாலின் கெஞ்சியுள்ளார். இதெல்லாம் ஒரு தலைமை பண்பா? இதைப்பற்றி தி.மு.க. தொண்டர்களே பேசி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் திருமுருகன் காந்தியின் கைது பற்றி நிருபர்கள் தினகரனிடம் கேட்டனர்.

    அதற்கு அவர் பதிலளித்து பேசும் போது, ‘‘ஆட்சி, அதிகாரம் கையில் இருப்பதால் ஒவ்வொருவரையும் கைது செய்து வருகிறார்கள். இதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் இந்த ஆட்சி முடிவுக்கு வந்து விடும்’ என்றார். #TTVDhinakaran #EdappadiPalaniswami
    Next Story
    ×