search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளை 4 வாரத்திற்குள் மாற்றவேண்டும்- ஐகோர்ட் அதிரடி உத்தரவு
    X

    சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளை 4 வாரத்திற்குள் மாற்றவேண்டும்- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    சென்னை மாநகராட்சியில் உள்ள ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரையும் 4 வாரங்களுக்குள் மாற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. #ChennaiCorporation #HighCourt
      சென்னை:

    சென்னையில் கட்டிடம் கட்டுவது, சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.

    லஞ்சம் கொடுத்தால்தான் உடனுக்குடன் வேலை முடிகிறது என்ற மனநிலையும் மக்கள் மத்தியில் பரவி உள்ளது.

    அரசு அலுவலகங்களில் லஞ்சம் கைமாறுவதை தடுப்பதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தனித்தனி பிரிவுகள் உள்ளன. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் கடமையாகும்.

    இந்த வகையில் சென்னை மாநகராட்சியிலும் டி.எஸ்.பி., 2 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தனியாக செயல்படுகிறது. இவர்கள் மீதான புகார் குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை இன்று வழங்கியது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    சென்னை செனாய் நகரில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு முன்பு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் ஜெனரேட்டர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதை வேறு இடத்துக்கு மாற்றும்படி லட்சுமி கோரி வந்தார்.

    இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆஜரானார். மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.

    மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    ‘விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்காத சென்னை மாநகராட்சியின் செயல், பொதுமக்களிடம் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

    மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் விதிகளுக்கு உட்பட்டு கட்டிடங்களுக்கு ஒப்புதல்கள் வழங்கப்படுகின்றதா? விதிமீறல் கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க வேண்டும்.

    ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்கள், மாநகராட்சியில் ஊழலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை மாநகராட்சி ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’

    சென்னை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கான ஒப்புதல் உள்ளிட்ட எந்த சான்றிதழையும் லஞ்சம் கொடுக்காமல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்து வரிகளை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:-

    ‘சென்னை மாநகராட்சியில் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகிறது. விதிமீறல் கட்டிடங்கள் எல்லாம் தாராளமாக கட்டப்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகள் கண் மூடித்தனமாக நடைபெறுகிறது.


    இதுபோன்ற ஊழல் நடவடிக்கையில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளனர்.

    ஆனால், இவர்கள் இதுவரை எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களும் குற்றவாளிகளுடன் கை கோர்த்து செயல்படுகின்றனரோ? என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது.

    எனவே, சென்னை மாநகராட்சியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி முதல் போலீஸ்காரர் வரை அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும்.

    ‘தமிழக டி.ஜி.பி. நேர்மையான போலீஸ் அதிகாரிகளையும், போலீசாரையும், மாநகராட்சி ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். இந்த போலீஸ் அதிகாரிகள், சட்ட விரோதமான கட்டிடங்களுக்கு ஒப்புதல் அளித்த மாநகராட்சி என்ஜினீயர்கள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். ஊழல் செய்த அதிகாரிகள் யாரையும், போலீசார் விடக்கூடாது. அனைவர் மீதும் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சி அலுவலகங்கள் அனைத்திலும், ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்று அலுவலகம் மட்டுமல்லாமல், மாநகரம் முழுவதும் சுவரொட்டி மூலமும், துண்டு பிரசுரம் மூலமும் மக்களிடையே பிரசாரம் செய்யவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். #ChennaiCorporation
    Next Story
    ×