search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை - தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுப்பு
    X

    சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை - தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுப்பு

    சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. #IdolTheftCases
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நடத்தி வந்தார். அவரது தலைமையிலான தனிப்படை விசாரணையில் சிலர் சிக்கினர்.

    மேலும் ஒரு சில முக்கியஸ்தர்களுக்கும், தமிழக அரசு அதிகாரியும் சிலை கடத்தலில் தொடர்பு இருப்பதாக அவரது விசாரணையில் தெரியவந்தது. அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    சிலை கடத்தல் தொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகிய 2 ஐகோர்ட்டு நீதிபதிகளை பிரத்யேகமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நியமித்து உள்ளார்.

    இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிபதிகள் முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளையும், இனிமேல் பதிவாகும் வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப தமிழக அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதாக ஐகோர்ட்டில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தனிச்சையாக செயல்படுவதால் அவரது விசாரணயில் திருப்தி ஏற்படவில்லை. எனவே இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த பாண்டியன் வாதிட்டார். இதற்கான அரசாணையை தமிழக அரசு உடனே வெளியிட்டது.

    இந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

    இதற்கிடையே கடந்த வாரம் ஐகோர்ட்டில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் உள்நோக்கம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை, ஐகோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில், சிலை கடத்தல் குற்றங்களை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு வைத்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    அதில், சிலை கடத்தல் குற்றம் தொடர்பான வழக்குகளின் எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய ஆவணங்களை இணைத்து அனுப்பவில்லை. பரிந்துரைக் கடிதம் மட்டுமே இருக்கிறது. வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சேர்த்து அனுப்பினால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரம் தெரிவித்தது.  #IdolTheftCases
    Next Story
    ×