search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளநீர் வியாபாரியை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி- 5 பேர் கும்பல் கைது
    X

    இளநீர் வியாபாரியை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி- 5 பேர் கும்பல் கைது

    கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் இளநீர் வியாபாரியை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் - தாராபுரம் சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே இளநீர் கடை நடத்தி வருபவர் இளைய பாரதி (35). இவர் நேற்று இரவு தனது கடை முன் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது காரில் 5 பேர் வந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் இளநீர் வியாபாரி இளைய பாரதியை சரமாரி தாக்கினார்கள்.

    மேலும் அரிவாளால் வெட்டினர். உடனே இளைய பாரதி சத்தம் போட்டார். இதனை கேட்டதும் பக்கத்தில் இருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர்.

    இதனை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பி ஓடினார்கள். இது குறித்து சுந்தராபுரம் சோதனை சாவடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். தப்பி ஓடிய 5 பேரை போலீசார் விரட்டி சென்றனர்.

    அவர்களில் 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். மற்ற 3 பேர் காரில் தப்பி விட்டனர். இது குறித்து அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    திருப்பூர் எம்.எஸ். நகரில் போலீசார் சோதனை நடத்திய போது காரில் தப்பி சென்ற 3 பேரை மடக்கினார்கள். பிடிபட்ட 5 பேரையும் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் முருகன், காளிமுத்து, ஜெய் கணேஷ், மணிகண்டன், இம்ரான் என்பது தெரிய வந்தது. இவர்களில் முருகன் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆவார். அவர் இளநீர் வியாபாரி இளைய பாரதி கடை அருகே ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார்.

    இருவருக்கும் கொடுக்கல் -வாங்கல் இருந்து வந்தது. இதனால் முன் விரோதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் இளைய பாரதியை தீர்த்து கட்ட முருகன் முடிவு செய்தார். இதற்காக காளிமுத்து, ஜெய் கணேஷ், மணிகண்டன், இம்ரான் ஆகியோரை கூலிப்படையாக அமர்த்தி உள்ளார்.

    அதன்படி நேற்று இரவு 5 பேரும் இளைய பாரதியை கொல்ல முயன்ற போது போலீசில் சிக்கி கொண்டது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான காளிமுத்து மீது கொலை முயற்சி, ஆள் கடத்தில் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இள நீர் வியாபாரி கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×