search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைப்பு - புன்னைநல்லூர் கோவில் தரைக்கடை வியாபாரிகள் உண்ணாவிரதம்
    X

    ஆக்கிரமிப்பு கடைகளுக்கு சீல் வைப்பு - புன்னைநல்லூர் கோவில் தரைக்கடை வியாபாரிகள் உண்ணாவிரதம்

    தஞ்சை அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆக்கிரமிப்பு செய்ததாக 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததை கண்டித்து வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு வெளியே தரைக்கடை வியாபாரிகள் பூஜை பொருள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் 2 கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அரண்மனை தேவஸ்தானம் சார்பில் கோர்ட்டில் இருந்து அதிகாரிகள் வந்து கடைகளுக்கு சீல்வைத்து விட்டு சென்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள சுமார் 120 தரைக்கடைகளும் அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை இந்த பகுதியில் உள்ள 120 தரைக்கடை வியாபாரிகளும், அதிகாரிகளை கண்டித்து கடைகளை அடைத்து விட்டு அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

    இவர்களது போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சாலையில் இருபுறம் உள்ள தரைக்கடைகள் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிதில் பூஜை பொருட்களை வாங்கி செல்வதற்கு இங்குள்ள தரைக்கடைகள் தான் உள்ளது.

    இதை அப்புறப் படுத்தினால் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் வாழ்க்கை பாதிக்கும் நிலைமை ஏற்படும். மேலும் தற்போது இந்த கடைகளை அப்புறப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதனை காரணம் காட்டி கோவில் பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது அராஜகமான செயலாகும். இதனை முதல்வர் பார்வைக்கு எடுத்து செல்ல வேண்டும். அதிகாரிகள் தொடர்ந்து இங்குள்ள கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக தீவிரமடையும்.

    சில்லரை வணிகத்தை ஒழித்துவிட்டு ஆன்-லைன் வணிகத்தை மக்கள் இடத்தில் கொண்டு வருவதற்கே இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×